தென்காசி மாவட்டம் சிவகிரியில் வியாபாரியை ஏமாற்றி போலி தங்க நகைகளை விற்க முயன்ற வடமாநில நபர்கள் இரண்டு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், “சிவகிரியில் பலசரக்கு கடை நடத்தி வருபவா் தங்கராஜ் (வயது 62). இவரின் கடைக்கு தொடர்ந்து பொருட்கள் வாங்குவதற்காக, வடமாநிலத்தை சேர்ந்த 2 பேர் வந்துள்ளனர்.
இந்த அறிமுகத்தை பயன்படுத்தி கடந்த 18-ந்தேதி அவர்கள் கடைக்கு வந்தபோது, ‘நாங்கள் அருகில் உள்ள செங்கல்சூளையில் தொழிலாளிகளாக வேலை செய்து வருகிறோம். பணிசெய்யும் இடத்தில் எங்களுக்கு தங்கப்புதையல் கிடைத்திருக்கிறது.
இதை நாங்கள் வெளியில் கொண்டு சென்று விற்றால் எங்கள்மீது சந்தேகப்பட்டு, போலீஸ் பிடித்துவிடும். தொழிலாளியாக வேலை பார்க்கும் எங்களுக்கு இது தேவையற்ற பிரச்னையை உண்டாக்கும். எங்களுக்கு கிடைத்திருக்கும் தங்கம் மார்க்கெட்டில் எப்படியும் 20 லட்சம் ரூபாய்க்கு மேல் விலையிருக்கும். ஆனால் எங்களுக்கு அவ்வளவு தேவையில்லை. நீங்கள், எங்களுக்கு 5 லட்ச ரூபாய் தந்தால் போதும். அந்த தங்கப்புதையலை உங்களுக்கே கொடுத்துவிடுகிறோம்.
உங்களுக்கு இதில் சம்மதம் என்றால், தற்போது 2000 ரூபாய் முன்பணமாக தாருங்கள். மீதியை நாளை சொக்கன்நாதன்புதூர் விலக்கு பகுதிக்கு வந்து தங்கத்தை வாங்க வரும்போது தந்தால் போதும்’ என தங்கராஜிடம் கூறியிருக்கின்றனர். தொடர்ந்து கிடைத்த புதையலின் மாதிரி எனக்கூறி, ஒரு கிராம் தங்கத்தையும், அவரிடம் கொடுத்துள்ளனர்.
இதை உண்மையென்று நம்பிய தங்கராஜூம், அவர்கள் சொன்னபடி இரண்டாயிரம் ரூபாயை முன்பணமாக கொடுத்ததுடன் மறுநாள்(19-ந்தேதி), 5 லட்ச ரூபாயை எடுத்துக்கொண்டு சொக்கநாதன்புதூர் விலக்கு பகுதிக்கு சென்றிருக்கிறார். அங்கு நடந்த சந்திப்பில், தங்கப்புதையல் எனக்கூறி போலி தங்கத்தை தங்கராஜிடம் அவர்கள் விற்க முயன்றுள்ளனர். இதை, போலி நகைகளை பார்த்ததும் தெரிந்துக்கொண்ட தங்கராஜ், சுதாரித்துக்கொண்டு நான் தற்போது பணம் குறைவாக கொண்டுவந்துள்ளேன். வீட்டுக்கு சென்று முழுப்பணத்தையும் கொண்டுவருவதாக சொல்லிவிட்டு அங்கிருந்து வந்துவிட்டார்.
இதுகுறித்து சிவகிரி போலீஸில் தங்கராஜ் புகார் அளித்தார். அதன்பேரில் ரகசியமாக விசாரணை நடத்திய போலீஸார், போலித்தங்கத்தை விற்பனை செய்ய முயன்ற குஜராத் மாநிலம், அகமதாபாத், டக்கா் நகரைச் சோ்ந்த கிசன்(வயது 42), சுனில்(42) ஆகியோரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், நாடோடியாக வாழ்ந்து வரும் கிஷன், சுனில் இருவரும் தமிழகத்தில் சென்னை, விழுப்புரம், சூலூர், சேலம், ஈரோடு, திருவள்ளூர் மற்றும் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலும் இதுபோன்று போலி தங்க நகைகளை விற்பனை செய்து கிடைத்த பணத்தை சுருட்டிக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றது தெரியவந்தது. ஆனால் இதுகுறித்து எவ்விதமான புகார்களும் இதற்கு முன்னர் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து கைதுசெய்யப்பட்ட கிசன், சுனில் ஆகியோரிடமிருந்து, 2 கிலோ போலி தங்க நகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்” என தெரிவித்தனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.