ஹைதராபாத்: ”தெலங்கானாவில் மொத்தமுள்ள 119 தொகுதிகளில் காங்கிரஸுக்கு 20-க்கும் குறைவான இடங்களே கிடைக்கும்” என்று பாரத் ராஷ்ட்ர சமிதி தலைவரும், தெலங்கானா முதல்வருமான கே.சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.
தெலங்கானாவில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 30-ம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு மத்திராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேசிய பாரத் ராஷ்ட்ர சமிதி தலைவரும், தெலங்கானா முதல்வருமான கே.சந்திரசேகர் ராவ், “நான் உறுதியாக சொல்கிறேன், வரவிருக்கும் தேர்தலில் காங்கிரஸ் நிச்சயமாக வெற்றி பெறாது. தெலங்கானாவில் மொத்தமுள்ள 119 தொகுதிகளில் காங்கிரஸுக்கு 20-க்கும் குறைவான இடங்களே கிடைக்கும். கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகளை விட, அதிக வாக்குகள் பெற்று சிறப்பான பெரும்பான்மையுடன் பிஆர்எஸ் கட்சி ஆட்சி அமைக்கும். இதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. மக்களை ஏமாற்றும் வரலாறு காங்கிரஸுக்கு இருக்கிறது. 2014-ல் தெலங்கானா மாநிலம் உருவாவதற்கு முன்னர், அதாவது பிரிக்கப்படாத ஆந்திராவை காங்கிரஸ் ஆட்சி செய்தபோது, மக்களுக்கு போதிய குடிநீர் மற்றும் பாசன நீர் வழங்குவதை கூட உறுதி செய்ய முடியவில்லை. மாறாக 2014 ஆம் ஆண்டு பிஆர்எஸ் ஆட்சி அமைத்த பிறகு, தெலங்கானா மாநிலம் நல்ல முன்னேற்றத்தை அடைந்தது.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ‘இந்திரம்மா ராஜ்ஜியத்தை’ (Indiramma Rajyam) மீண்டும் கொண்டுவருவதாக காங்கிரஸ் தலைவர்கள் உறுதியளிக்கிறார்கள், ஆனால் அந்த காலகட்டம் எமர்ஜென்சியால் குறிக்கப்பட்டது. அப்போது பட்டியலினத்தவரின் வாழ்க்கை எப்படி இருந்தது? சுதந்திரத்திற்குப் பிறகு, ‘தலித் பந்து’ (Dalit Bandhu) போன்ற பிஆர்எஸ் அரசின் நலத்திட்டம் விரைவாக செயல்படுத்தப்பட்டிருந்தால், பட்டியலினத்தவர்கள் ஏழைகளாக இருந்திருப்பார்களா?” என்று அவர் கேட்டார். ‘தலித் பந்து’ என்பது தெலங்கானா அரசாங்கத்தின் முதன்மை திட்டமாகும். இது தலித் குடும்பங்களை மேம்படுத்துவதற்கான ஒரு நலத்திட்டமாக கருதப்படுகிறது.