சென்னை: நடிகை த்ரிஷாவப் பற்றித் தான் தவறாக ஏதும் பேசவில்லை என்றும் தன்னிடம் எந்த விளக்கமும் கேட்காமல் நடவடிக்கை எடுத்ததன் மூலம் நடிகர் சங்கம் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது என்றும் நடிகர் மன்சூர் அலி கான் தெரிவித்துள்ளார். மேலும் இவ்விவகாரத்தில் தான் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
நடிகை த்ரிஷா பற்றி பேசிய பேச்சு சர்ச்சையான நிலையில் சென்னையில் இன்று (செவ்வாய்) மன்சூர் அலி கான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “நடிகை த்ரிஷா பற்றி நான் தவறாகப் பேசவில்லை. உண்மையில் நான் அவரைப் பாராட்டிதான் பேசினேன். அதற்காக அவர் எனக்கு நன்றிதான் சொல்ல வேண்டும். நடிகர் சங்கம் இவ்விவகாரத்தில் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது. ஒரு விஷயம் சர்ச்சையானால் அதுபற்றி என்னிடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் எந்த விளக்கமும் கேட்கவில்லை. என் மீது தவறாக நடவடிக்கை எடுத்துள்ளனர். 4 மணி நேரத்துக்குள் அவர்கள் அந்த நடவடிக்கையை வாபஸ் பெற வேண்டும். என்னைப் பற்றி மக்களுக்குத் தெரியும். அவர்கள் என் பக்கம் நிற்கிறார்கள். நான் யாரிடமும் மன்னிப்பு கேட்கக்கூடிய ஆள் இல்லை. எரிமலை குமுறினால் சுற்றியிருப்பவர்கள் தெறித்து ஓடுவார்கள்” என்றார்.
முன்னதாக நடிகர் சங்கம் வெளியிட்ட கண்டன அறிக்கையில், “மக்களால் கவனிக்கப்படும் பிரபலங்களாக இருக்கும்போது, தான் உதிர்க்கும் கருத்துகளும், வார்த்தைகளும் கண்ணியமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படை உணர்வின்றி அவர் பேசியது மிகவும் தவறாகும். எந்த ஊடகம் முன்பு அவர் பேசினாரோ அந்த ஊடகம் முன்பு உண்மை மனதுடன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டுகிறோம்” என்று வலியுறுத்தியிருந்தது.
சர்ச்சையின் பின்னணி: சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் நடிகர் மன்சூர் அலிகான், நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இந்தப் பேச்சுக்கு திரைத் துறையில் இருந்து மட்டும் அல்லாமல் பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்களும் எதிர்ப்புகளும் தெரிவிக்கப்பட்டிருந்தன.
மன்சூர் அலிகானின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த த்ரிஷா, “இவரை போன்றவர்களால்தான் மனித குலத்துக்கே அவப்பெயர். இனி எனது திரை வாழ்க்கையில் அவருடன் இணைந்து நடிக்க மாட்டேன்” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இது குறித்து தேசிய மகளிர் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில், ‘நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் பேசியது மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது.
இந்த விவகாரத்தில் தாங்கள் தாமாக முன்வந்து, ஐபிசி பிரிவு 509 பி மற்றும் பிற சட்டங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபிக்கு பரிந்துரைக்கிறோம்.
இதுபோன்ற கருத்துகள்பெண்களுக்கு எதிரான வன்முறையை சாதாரணமாக கருதத் தூண்டுகிறது. இது வன்மையாக கண்டிக்கப்படவேண்டிய ஒன்று’ என்று பதிவிட்டிருந்தது.