பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு புதிய பந்துவீச்சு பயிற்சியாளர்கள் நியமனம்!

லாகூர்,

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி 4 வெற்றி, 5 தோல்வியுடன் லீக் சுற்றை தாண்டவில்லை. தோல்வி எதிரொலியாக கேப்டன் பதவியில் இருந்து பாபர் அசாம் விலகினார். இதையடுத்து டெஸ்ட் அணிக்கு பேட்ஸ்மேன் ஷான் மசூத் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அணியின் புதிய தேர்வு குழு தலைவராக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ் பொறுப்பேற்றார். மேலும் அந்த அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பதவியிலிருந்து மோர்னே மார்கல் விலகினார்.

இதனையடுத்து பாகிஸ்தான் அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு புதிய பந்துவீச்சு பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி அந்த அணியின் முன்னாள் வீரர்களான உமர் குல் மற்றும் சயீத் அஜ்மல் முறையே வேகப்பந்து மற்றும் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் இந்த பதவிக்காலம் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திலிருந்தே ஆரம்பமாக உள்ளது.

உமர் குல் மற்றும் அஜ்மல் ஆகியோர் பாகிஸ்தான் அணிக்காக விளையாடி அனுபவம் வாய்ந்தவர்கள். வேகப்பந்து வீச்சு பயிற்சியாளரான உமர் குல் பாகிஸ்தான் அணிக்காக 237 சர்வதேச போட்டிகளில் விளையாடி 427 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். அதேவேளையில் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளரான அஜ்மல் 212 சர்வதேச போட்டிகளில் விளையாடி 447 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

உமர் குல் உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பணியாற்றினார்.

அஜ்மல் பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) தொடரில், இஸ்லாமாபாத் யுனைடெட் அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.