'பினராயி விஜயன் தலைமையில் கேரளம் கேங்ஸ்டர் ஸ்டேட் ஆக மாறிவிட்டது' – எதிர்க்கட்சித் தலைவர் ஆவேசம்

கேரள மாநிலத்தில் சி.பி.எம் முதல்வர் பினராயி விஜயன் இரண்டாவது முறையாக ஆட்சி செய்துவருகிறார். கடந்த நவம்பர் 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை கேரள மாநிலம் பிறந்தநாள் விழாவான கேரளீயம் நிகழ்ச்சியை முதல்வர் பினராயி விஜயன் முன்னின்று நடத்தினார். அதைத்தொடர்ந்து மக்களை சந்திக்கும் விதமாக முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் இணைந்து மக்களை சந்திக்கும் ‘நவகேரள சதஸ்’ என்ற தலைப்பில் பஸ் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அனைத்து பகுதிகளிலும் சென்று அரசு திட்டங்களை எடுத்துக்கூறும் விதமாக பொது நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர். நேற்று கண்ணூர் மாவட்டம்,  தளிப்பறம்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துவிட்டு வந்த முதல்வர் பினராயி விஜயனுக்கு இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் கறுப்பு கொடி காட்டினர். இதனால் ஆத்திரம் அடைந்த சி.பி.எம், டி.ஒய்.எஃப்.ஐ நிர்வாகிகள் இணைந்து இளைஞர் காங்கிரஸாரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், முதல்வர் பினராயி விஜயனுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸாரும் இணைந்து இளைஞர் காங்கிரஸாரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் 7 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அதில் ஒருவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது எதிர்க்கட்சிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீசன், காங்கிரஸ் மாநில தலைவர் கே.சுதாகரன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், கண்ணூரில் இன்று காங்கிரஸார் போராட்டம் நடத்தினர்.

கேரள முதல்வர் பினராயி விஜயன்

இந்த சம்பவம் குறித்து முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், “ஒருவர் வாகனத்தை நோக்கி ஓடி வந்தபோது, அவருக்கு விபத்து ஏற்படாமல் இருக்க சிலர் தடுத்து நிறுத்தினர். உயிரை காக்கும் விதமாக டி.ஒய்.எஃப்.ஐ-யினர் செயல்பட்டனர். இதில் என்ன தவறு இருக்கிறது” என்றார். மேலும், சி.பி.எம் மாநில செயலாளர் எம்.வி.கோவிந்தன் உள்ளிட்டோர் காங்கிரஸ் கட்சியினரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீசன்

இது குறித்து காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீசன் கூறுகையில், “மாநிலத்தில் மோசமான நடவடிக்கைகளில் ஈடுபடும் கிரிமினல்களை முதல்வர் நியாயப்படுத்துகிறார். பினராயி விஜயன் தலைமையில் கேரளம் ஒரு கேங்ஸ்டர் ஸ்டேட் ஆக மாறிவிட்டது. குண்டர்களின் நாடாக கேரளம் மாறிவிட்டது. போராட்டம் நடத்துபவர்களின் தலையில் அடிப்பதுதான் நவகேரளா சதஸ் நிகழ்ச்சியா?. தேவைப்பட்டால் எம்.பி-க்களும், எம்.எல்.ஏ-க்களும் கருங்கொடி போராட்டத்தில் குதிப்போம்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.