பாட்னா: பிஹார் மாநிலம் மதுபானி மாவட்டத்தில் மாதேபுரா மாவட்ட ஆட்சியரின் கார் ஒன்று வேகமாக மோதியதில் தாய், மகள் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிஹார் மாநிலம், மாதேபுரா மாவட்ட ஆட்சியர் (Madhepura District Magistrates) விஜய் பிரகாஷ் மீனாவின் கார் தங்கங்காவில் இருந்து மாதேபுரா நோக்கி இன்று சென்று கொண்டிருந்தது. அப்போது காரில் மாவட்ட ஆட்சியர் இல்லை என்று கூறப்படுகிறது. புஸ்பரஸ் காவல் நிலையத்திற்கு உள்பட்ட புர்வாரி தோலா அருகே தேசிய நெஞ்சாலையில் செல்லும் போது மாவட்ட ஆட்சியரின் கார், கட்டுப்பாட்டை இழந்து அவ்வழியாக சென்றவர்கள்மீது மோதியதாக கூறப்படுகிறது. அத்துடன் சாலையோர டிவைடரில் மோதி நின்றது.
மதுபானி மாவட்டம் புல்பரஸ் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 57-ல் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இறந்தவர்கள் குடியா குமாரி (வயது 35), அவரது ஐந்து வயது மகள் மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை துறையில்(NHAI ) பணிபுரியும் ஊழியர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் காயமடைந்தவர்கள் ராஜஸ்தானைச் சேர்ந்த NHAI தொழிலாளர்கள் அசோக் குமார் சிங் மற்றும் ராஜேஷ் குமார் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இருவரும் தற்போது தர்பங்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய காரின் ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். போலீஸார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.
இந்த வாகனத்தில் சில தொழில்நுட்ப கோளாறுகள் இருப்பதாகவும், பழுதுபார்ப்பதற்காக அனுப்பப்பட உள்ளதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சாலை விபத்துக்கு காரணமானவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, உள்ளூர் மக்கள் சம்பவ இடத்தில் போராட்டம் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.