மக்கள் இக்கட்டான சூழ்நிலைக்குள் சிக்கிக்கொள்ளும் வரை காத்திருந்த எதிர்க்கட்சிகளின் கனவுகள் இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் மூலம் சிதைக்கப்பட்டுள்ளன

மக்கள் மேலும் இக்கட்டான சூழ்நிலைக்குள் சிக்கிக்கொள்ளும் வரை காத்திருந்த எதிர்க்கட்சிகளின் கனவுகள் இந்த வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் சிதைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி பிரேம்நாத் சி. தொலவத்த தெரிவித்தார்.

மக்களுக்கு நிவாரணம் வழங்குவது மாத்திரமன்றி, அந்த நிவாரணங்களை எவ்வாறு வழங்குவது என்பதை எடுத்துக் காட்டிய இம்முறை வரவு செலவுத் திட்டம், நிச்சயம் அதிக வாக்குகளுடன் நிறைவேற்றப்படும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (20) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி. தொலவத்த இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி. தொலவத்த,

எமது நாடு எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு, எடுக்கப்பட்ட பிரபல்யமற்ற மற்றும் அரசியல் நோக்கமற்ற தீர்மானங்களினால், தற்போது நாடு ஸ்திரத்தன்மை அடைந்துள்ளது. அத்துடன் சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணையைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.

மேலும் மக்களுக்கு நிவாரணம் கிடைக்காது என எண்ணிய எதிர்க்கட்சிகளின் கனவை சிதைப்பதில் இவ்வருட வரவு செலவு திட்டம் வெற்றி கண்டுள்ளது.

2024 வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பதுடன் சிறுநீரக நோயாளர்கள் மற்றும் அங்கவீனருக்கான கொடுப்பனவுகளையும் அதிகரிக்க முன்மொழியப் பட்டுள்ளது. மேலும் மலையக மக்களுக்கு முழு காணி உரிமை வழங்குதல், பயன்படுத்தப்படாத காணிகளை விவசாயிகளுக்கு வழங்குதல், உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் போன்ற நீண்ட கால வேலைத்திட்டங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, நவீன உலகிற்குப் பொருத்தமான தொழில் வல்லுநர்களை உருவாக்கும் திட்டங்களும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. மக்களுக்கு வழங்கப்படும் சலுகைகளால் மாத்திரம் ஒரு நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது. அதற்கு நீண்ட கால வேலைத்திட்டங்கள் தேவை. இந்த நீண்ட கால வேலைத்திட்டங்களில் 2034 ஆம் ஆண்டுக்குள் ஆங்கில மொழி அறிவை மேம்படுத்துவதும் அடங்குகின்றது. மேலும், இதில் நேரடி வரிகளை அதிகரிக்கும் திட்டங்களும் முன்மொழியப்பட்டுள்ளன.

மக்கள் இக்கட்டான சூழ்நிலைக்குள் சிக்கிக்கொள்வார்கள் என எதிர்கட்சியினர் எதிர்பார்த்தாலும் நிவாரணங்களை வழங்குதல் என்பதை விட, எவ்வாறு அந்த நிவாரணங்களை வழங்குவது என்ற விடயமே இந்த வரவுசெலவுத் திட்டத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த வருட வரவு செலவுத் திட்டம் மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்படும் என்பதில் சந்தேகமில்லை. தனிப்பட்ட அரசியல் கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் நாட்டின் ஸ்திரத்தன்மைக்காக அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து நாட்டை வெற்றிப்பாதைக்குக் கொண்டு செல்லுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கின்றேன்.

இந்த விடயத்திற்கு மேலதிகமாக உள்ளூராட்சி மன்றங்களில் இளைஞர்களின் 25% பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் சட்டமூலம் அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. பெண்களின் பிரதிநிதித்துவம் அவ்வாறே இருக்கும் வகையில் தனிநபர் பிரேரணையாக இந்த முன்மொழிவை சமர்ப்பித்தேன். இது தொடர்பில் எனக்கு எதிராக நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. கடும் குற்றச்சாட்டுகள் மற்றும் அவதூறுகள் இருந்தபோதிலும், தொடர்ச்சியான அர்ப்பணிப்புகளினால் எம்மால் அதை நிறைவேற்ற முடிந்தது. ஆனால், இளைஞர்களுக்காக முன்நிற்பதாகக் கூறும் எதிர்க்கட்சிகள், வரவுசெலவுத் திட்டத்திற்குப் பிறகு அதனைக் கொண்டுவர கடுமையாக முயன்றன. அப்படியானால், அடுத்த ஆண்டு வரை இந்த விடயம் தாமதமாகும். அவர்கள் வரவுசெலவுத் திட்டத்தைத் தோற்கடிக்கவே விரும்புகிறார்கள்.

எதிர்கட்சியினர் கூறுவது போல் உண்மையில் அவர்கள் இளைஞர்களுக்காக முன்நிற்கிறார்களா என்ற கேள்வி தற்போது எழுகிறது. எவ்வாறாயினும், இழந்த இளைஞர் பிரதிநிதித்துவத்தை மீண்டும் கொண்டுவர முடிந்ததன் மூலம், நாட்டின் சாதாரண மக்கள் மத்தியில் அரசியல் களத்திற்கு இளைஞர்கள் முன்வருவதற்கான வாய்ப்புக் கிடைத்துள்ளதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.

மேலும், அடுத்த வருடம் தேர்தல் ஆண்டாக அமையும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். தேர்தலுக்குப் போதிய பணம் இல்லை என நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். ஆனால் விரைவான பொருளாதார வளர்ச்சியுடன், தேர்தல் நடத்துவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். ஜனாதிபதியின் அரசியல் தலைமையின் கீழ் தேர்தல் ஆணைக்குழு உரிய காலத்தில் தேர்தல்களை நடத்தும்.

மேலும், டொலரின் பெறுமதி அதிகரிப்புடன், நாட்டில் பொருட்களின் விலை அதிகரித்த போதிலும், தற்போது அந்நிலைமை ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் நியாயமற்ற முறையில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை அதிகரிப்பது குறித்தும், டொலரின் பெறுமதி குறைவடைந்ததன் பலன் மக்களுக்கு கிடைக்கின்றதா என்பது குறித்தும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

மேலும், LGBTQ சமூகங்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் தனிப்பட்ட உறுப்பினர் முன்மொழிவாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தண்டனைச் சட்டக் கோவை திருத்தச் சட்டமூலம் தொடர்பான அடுத்த பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் முன் இந்த விடயத்தை முன்வைக்க எனக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது . அதன்படி, அதற்கான இரண்டாவது வாசிப்புத் திகதியைப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையும் உள்ளது.” என்றும் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி. தொலவத்த மேலும் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.