மன்சூர் அலிகான் மீது வழக்கு : மகளிர் ஆணையம் வலியுறுத்தல்
சென்னை: நடிகை திரிஷா பற்றி ஆபாசமாக பேசிய நடிகர் மன்சூர் அலிகான் மீது, வழக்கு பதிவு செய்ய வேண்டும் என, தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தி உள்ளது.
சமீபத்தில், மன்சூர் அலிகான் பேட்டி அளித்த போது, லியோ படத்தில் நடித்தது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த மன்சூர் அலிகான், 'இப்போதெல்லாம் வில்லன் நடிகர்களுக்கு கற்பழிப்பு காட்சியில், நடிக்கவே வாய்ப்பு தருவது இல்லை' என, ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அப்போது, 'நடிகை திரிஷாவுடன் படுக்கை அறை காட்சியில் நடிக்க முடியவில்லையே' என, அருவருக்கத்தக்க வகையில், சில கருத்துகளை வெளியிட்டார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
'எக்ஸ்' சமூக வலைதளம் வாயிலாக, திரிஷா கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். 'மனித குலத்திற்கே அவர் அவமானம்' என்றும் கூறியிருந்தார்.
இதையடுத்து, 'என் பேட்டியை திரித்து வெளியிட்டுள்ளனர். என் பேச்சில் தவறு இல்லை. மன்னிப்பு கேட்க முடியாது' என, மன்சூர் அலிகான் கூறி வருகிறார்.
திரைப்பிரபலங்கள் பலரும் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். அதோடு நடிகர் சங்கமும் தனது கண்டனத்தை பதிவு செய்ததோடு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது.
இதற்கிடையில், இந்தப் பிரச்னை குறித்து, தேசிய மகளிர் ஆணையம், தானாக முன்வந்து விசாரணையை துவக்கி உள்ளது. பெண்ணை அவமதிக்கும் வகையில், அநாகரிகமாக பேசியது தொடர்பாக, மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என, தமிழக டி.ஜி.பி., சங்கர் ஜிவாலுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக, 'எக்ஸ்' வலைதளத்தில், ஆணையம் பதிவு வெளியிட்டுள்ளது.