மின்சாரத் துறை சீர் திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

மின்சாரத் துறையில் நிறுவன ரீதியிலான சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தி தற்போதைய பொருளாதார, சமூக மற்றும் நிர்வாகத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் புதிய மின்சாரச் சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை, முன்னர் அங்கீகாரம் வழங்கியதாக அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (21) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஊடகத்துறை அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மின்சார அமைச்சராக காஞ்சன விஜேசேகர சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தில் நீண்ட கால விவாதங்கள், மாநாடுகள், செயலமர்வுகள் போன்றவற்றின் பின்னரே இந்த இலங்கை மின்சார சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டமூலம் தொடர்பில் அமைச்சர்களுக்கு வேறு ஏதேனும் கருத்துக்கள் இருப்பின் அவற்றை வழங்குவதற்கு கால அவகாசம் வழங்கி, இறுதியாக சட்டமூலம் நேற்று முன்வைக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கமைய, சட்ட வரைவாளர்களால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின்; அனுமதி கிடைத்துள்ளது. இந்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும், பின்னர் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கும், மின்சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது என்றும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.