புதுடெல்லி: சாட் ஜிபிடியை உருவாக்கிய ஓபன்ஏஐ நிறுவன சிஇஓ பதவியில் இருந்து நீக்கப்பட்ட சாம் ஆல்ட்மேன் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் இணைந்துள்ளார். இதுகுறித்து மைக்ரோசாப்ட் நிறுவன சிஇஓ சத்யா நாதெல்லா,எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
சாம் ஆல்ட்மேன் மற்றும் அதன்முன்னாள் தலைவர் கிரெக் ப்ரோக்மேன் ஆகியோர் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் இணைந்து செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஆராய்ச்சிக்கான புதிய குழுவை வழிநடத்துவார்கள். ஓப்பன் ஏஐ நிறுவனத்துடனான எங்கள் கூட்டணி தொடரும். அத்துடன் வாடிக்கையாளர்களுக்கு புதுவிதமான தயாரிப்புகளை வழங்குவோம் என்பதிலும் நம்பிக்கை கொண்டுள்ளோம். சாம் ஆல்ட்மேன் மற்றும் கிரெக் ப்ரோக்மேன் ஆகியோருக்கு தேவையான அனைத்து ஆதரவையும் வழங்குவோம். இவ்வாறு சத்யா நாதெல்லா தெரிவித்துள்ளார்.
விண்டோஸ் ஆராய்ச்சி குழுவின் சிஇஓ-வாக நியமிக்கப்பட்டுள்ளதையடுத்து சத்ய நாதெல்லாவின் இந்தப் பதிவை ‘‘பணி தொடர்கிறது’’ என்ற வாசகத்துடன் ஆல்ட்மேன் தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் மாபெரும் பாய்ச்சலானசாட் ஜிபிடியை உருவாக்கிய சாம் ஆல்ட்மேன் மற்றும் கிரெக் ப்ரோக்மேன் ஆகியோரை ஓப்பன் ஏஐ நிறுவனம் கூகுள் மீட் அழைப்பின் மூலமாகவே நீக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.