பெய்ரூட்: லெபனான் நாட்டின் தெற்கு பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 2 பத்திரிகையாளர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்கள் இருவரும் அந்த நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் இயங்கி வரும் அல்-மயாதீன் எனும் அரபு மொழி தொலைக்காட்சிக்காக பணியாற்றி வந்துள்ளனர். இந்த சம்பவத்தின் போது அவர்கள் லெபனான் – இஸ்ரேல் எல்லை நிலவரம் தொடர்பாக செய்தி சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தகவல் அந்த நாட்டின் தகவல் துறை அமைச்சர் ஜியாத் மக்காரி உறுதி செய்துள்ளார். இந்த தாக்குதலில் லெபனான் நாட்டை சேர்ந்த ஒருவரும் உயிரிழந்துள்ளார். அந்த நாட்டில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்புடன் இணைந்து அல்-மயாதீன் தொலைக்காட்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
கடந்த வாரம் இஸ்ரேலில் அல்-மயாதீன் தொலைக்காட்சி ஒளிபரப்பு தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பத்திரிக்கையாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல் குறிவைத்து மேற்கொள்ளப்பட்டது என லெபனான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆராய்வதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை அன்று இஸ்ரேல் – லெபனான் எல்லையை ஒட்டிய தெற்கு லெபனான் பகுதி கிராமங்களில் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 80 வயது மூதாட்டி உயிரிழந்துள்ளார். அவரது பேரக்குழந்தையும் காயமடைந்துள்ளனர். அவரால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த அக்டோபர் 14-ம் தேதி இதே தெற்கு லெபனான் பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ராய்டர்ஸ் பத்திரிகையாளர் உயிரிழந்தார். இந்த தாக்குதலில் சர்வதேச பத்திரிகை நிறுவனங்களை சேர்ந்த 2 பத்திரிகையாளர் காயமடைந்தனர். கடந்த 8-ம் தேதி முதல் இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீனம் மற்றும் லெபனான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.