திருவனந்தபுரம், பிரிட்டன் கட்டுப் பாட்டின் கீழ் உள்ள கடல் பகுதியில் மீன் பிடித்த குற்றத்திற்காக கடந்த ஒரு மாதம் முன் கைது செய்யப்பட்ட, 35 தமிழக மீனவர்கள் நேற்று விடுவிக்கப்பட்டனர்.
இந்திய பெருங்கடலில், கிழக்கு ஆப்ரிக்காவுக்கும், இந்தோனேஷியாவுக்கும் இடைப்பட்ட 6,40,000 சதுர கி.மீ., பகுதி, பிரிட்டன் இந்திய பெருங்கடல் பகுதி என அழைக்கப்படுகிறது.
தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்பட்டினத்தில் இருந்து ஆழ்கடலில் மீன் பிடிக்க இரண்டு கப்பல்களில் 35 மீனவர்கள் சென்றனர்.
இவர்கள், பிரிட்டன் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய பெருங்கடல் பகுதிக்குள் அத்துமீறி மீன்பிடித்த குற்றத்திற்காக கடந்த செப்., 29ல் கைது செய்யப்பட்டனர்.
இந்த குற்றத்திற்காக இவர்களுக்கு, 26 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. ஒரு மாதத்துக்கு மேல் ஆகியும் அபராத தொகையை செலுத்தாததால், ஒரு மீன்பிடி கப்பலை பிரிட்டன் கடற்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மற்றொரு கப்பலும், 35 மீனவர்களும் நேற்று விடுவிக்கப்பட்டனர். இவர்கள், பிரிட்டன் இந்திய பெருங்கடல் பகுதிக்கு சொந்தமான ரோந்து கப்பல் வாயிலாக, கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள விழிஞ்ஞம் கடல் பகுதிக்கு அழைத்து வரப்பட்டு, இந்திய கடலோர காவல் படையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
அவர்களுக்கான மருத்துவ பரிசோதனைகள் முடித்து, தமிழக மீன்வளத்துறையிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement