புதுடில்லி:’நீதிபதிகள் பணியிட மாற்றம் தொடர்பாக ‘கொலீஜியம்’ அளிக்கும் பரிந்துரையில், மத்திய அரசு தேர்ந்தெடுத்து அனுமதி அளிக்கும் போக்கு நல்ல அறிகுறியாக தெரியவில்லை’ என, உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் மற்றும் பணியிட மாற்றம் தொடர்பாக, உச்ச நீதிமன்ற கொலீஜியம் அளிக்கும் பரிந்துரையின் மீது இறுதி முடிவு எடுக்க மத்திய அரசு காலதாமதம் செய்வதாக குற்றச்சாட்டு உள்ளது.
இந்த விவகாரத்தில் கொலீஜியம் மற்றும் மத்திய அரசு இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்கள், நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், சுதான்ஷு துலியா அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
உயர் நீதிமன்றங்களில் 11 நீதிபதிகளை பணியிட மாற்றம் செய்ய, கொலீஜியம் சமீபத்தில் பரிந்துரை செய்திருந்தது.
அதில், ஐந்து நீதிபதிகளின் பணியிட மாற்றத்துக்கான உத்தரவுகளை மட்டும் மத்திய அரசு பிறப்பித்துள்ளது.
குஜராத்தைச் சேர்ந்த நான்கு நீதிபதிகள், அலகாபாத் மற்றும் புதுடில்லி உயர் நீதிமன்றத்தில் தலா ஒரு நீதிபதிக்கான பணியிட மாற்ற ஆணை இதுவரை வெளியிடப்படவில்லை.
நீதிபதிகள் பணியிட மாற்றத்தில் கொலீஜியம் அளிக்கும் பரிந்துரையில் மத்திய அரசு தேர்ந்தெடுத்து அனுமதி அளிக்கும் போக்கு நல்ல அறிகுறியாக தெரியவில்லை.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த விவகாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும், 10 நாட்கள் அவகாசம் அளிக்கும்படியும் அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கட்ரமணி தெரிவித்தார்.
இதை தொடர்ந்து விசாரணை அடுத்த மாதம் 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement