Deep Fake: `36 மணி நேரம் காலக்கெடு, அதற்குள் நீக்காவிட்டால்..!' – சமூக ஊடகங்களுக்கு அரசு எச்சரிக்கை!

`Deep fake’ என்பது AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒருவரின் புகைப்படம் அல்லது வீடியோவில், வேறொருவரின் முகத்தைப் பொருத்தி உண்மையாகவே அந்தக் குறிப்பிட்ட நபரே இருப்பதுபோல் உருவாக்கப்படுவதாகும். இதில் உண்மைத்தன்மையைக் கண்டறிவது அவ்வளவு எளிதல்ல. Deep fake தொழில்நுட்பம் ஒருவரை ஆபாசமாகச் சித்திரிப்பது போன்ற சிக்கல்களை எளிமையாக்குகிறது. சமீபகாலங்களில் நடிகை ராஷ்மிகா மந்தனா, கத்ரினா கைஃப், கஜோல் உள்ளிட்டத் திரைப் பிரபலங்கள், இத்தகைய தொழில்நுட்ப வீடியோக்களால், பாதிக்கப்பட்டிருந்தனர். பிரதமர் நரேந்திர மோடியும், `என்னை வைத்தும் Deep fake வீடியோக்கள் வெளிவந்திருக்கின்றன. மக்கள் வீடியோவின் உண்மைத்தன்மையை அறியாமல், அதை அப்படியே நம்பிவிடுகின்றனர். இந்தப் போக்கு சமூகத்தில் பெரும் சவாலை உண்டாக்கும்’ எனக் கவலை தெரிவித்திருந்தார்.

இந்தச் சம்பவம் பெரும் சர்ச்சைகளை உண்டாக்கியது. `Deep fake தொழில்நுட்பப் பிரச்னைகளுக்கு, மத்திய அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’ என்ற கோரிக்கையும் எழுந்தது. இந்த நிலையில், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், இது தொடர்பாக தனியார் ஊடகத்துக்குப் பேட்டியளித்திருக்கிறார்.

Deep fake

அதில் பேசிய அவர், “இணையத்தைப் பயன்படுத்தும் இந்திய மக்களுக்குப் பாதுகாப்பையும், நம்பிக்கையையும் வழங்குவது நமது‌ கடமை. Deep fake தொழில்நுட்பத்தால் மக்கள் பாதிப்புக்குள்ளாவதைத் தடுக்க, நவம்பர் 24-ம் தேதி மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது.

இதில், இந்தியாவில் செயல்படும் கூகுள், யூடியூப், ஃபேஸ்புக் போன்ற ஆன்லைன் தளங்களின் நிர்வாக உறுப்பினர்களும் பங்கேற்கின்றனர். கூட்டத்தில், `Deep Fake’ தொழில்நுட்பம் மக்களை எந்த அளவு பாதிக்கிறது என்பதை, சமூக வலைதள நிர்வாகிகளுக்கு எடுத்துக்கூறுவோம். தங்களது தளங்களில் Deep Fake வீடியோக்கள் வெளியிடப்பட்டிருப்பது குறித்து புகார்கள் எழுந்தால், 36 மணி நேரத்துக்குள் அவற்றை நீக்க வேண்டும் என்ற காலக்கெடுவையும் நிர்ணயம் செய்யவிருக்கிறோம்.

அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்

கொடுக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் அந்தப் பதிவை நீக்கம் செய்யவில்லை என்றால், அவர்களது தளங்களுக்கு, தகவல் மற்றும் தொழில்நுட்பச் சட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட `பாதுகாப்பான இணையதளம்’ என்ற அந்தஸ்து திரும்பப் பெறப்படும் என்ற எச்சரிக்கை விடுக்கப்படும்.

இந்த அந்தஸ்து திரும்பப் பெறப்பட்டால், `இணையத்தில் வெளிவரும்‌ போலியான தகவல்களுக்கு, இணையதள நிர்வாகம் பொறுப்பல்ல. அவற்றைப் பதிவிடும் பயனரே முழு பொறுப்பு’ என்ற சட்டம் சம்பந்தப்பட்ட வலைதளத்துக்குச் செல்லுபடியாகாது. எனவே, பாதிக்கப்பட்ட நபர் நீதிமன்றத்துக்குச் சென்று இணையதள நிர்வாகத்தின்மீது இந்திய தண்டனைச் சட்டம் அல்லது தகவல் தொழில்நுட்பச் சட்டம் ஆகியவற்றின்கீழ் கிரிமினல் வழக்கு பதிவுசெய்யலாம். இது போன்ற கட்டுப்பாடுகள் விதிப்பதால், பொய்யான தகவல்கள் பரவாமல் தடுக்க இணையதள நிர்வாகங்களும் முழு வீச்சில் செயல்படும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.