புதுடில்லி மணிப்பூர் மாநிலம், இம்பால் விமான நிலையத்தின் மேல், யு.எப்.ஓ., எனப்படும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் நேற்று முன்தினம் கண்டறியப்பட்டதை அடுத்து, நம் விமானப்படைக்கு சொந்தமான ரபேல் போர் விமானங்கள் அந்த பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டன.
‘சென்சார்’
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், முதல்வர் பைரேன் சிங் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இம்மாநில தலைநகரான இம்பாலில் உள்ள விமான நிலையத்தின் மேல், நேற்று முன்தினம் மதியம் 2:30 மணிக்கு யு.எப்.ஓ., எனப்படும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் தென்பட்டது.
விமான நிலையத்தின் விமான போக்குவரத்து சேவை பிரிவின் மேல் தளத்தில் இருந்து அந்த அடையாளம் தெரியாத பொருளை பலர் பார்த்துள்ளனர்.
விமான நிலைய ஊழியர்கள், பொதுமக்கள், போலீசார், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் உட்பட பலர் அந்த யு.எப்.ஓ.,வை நேரில் கண்டுள்ளனர்.
வெள்ளை நிறத்தில் பறந்த அந்த அடையாளம் தெரியாத பொருளை சிலர் படம் பிடித்தனர். நம் விமானப் படைக்கு இந்த தகவல் உடனடியாக தெரிவிக்கப்பட்டது.
இம்பாலுக்கு அருகில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து, ரபேல் போர் விமானம் உடனடியாக பறந்து வந்து இம்பால் விமான நிலையத்தில் மேல் கண்காணிப்பில் ஈடுபட்டது.
அதிநவீன, ‘சென்சார்’ கருவி உதவியுடன், அந்த அடையாளம் தெரியாத பறக்கும் பொருளை கண்டறியும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அந்த பறக்கும் பொருள் அப்போது தென்படவில்லை.
பாதுகாப்பு நடைமுறை
அந்த விமானம், படை தளத்துக்கு திரும்பியதும், மற்றொரு ரபேல் போர் விமானம் புறப்பட்டு, இம்பால் விமான நிலையத்தின் மேல் பகுதியில் வட்டமிட்டது.
அந்த விமானத்தாலும் யு.எப்.ஓ.,வை கண்டறிய முடியவில்லை.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, இம்பால் பகுதியில் வான் பாதுகாப்பு நடைமுறைகள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக மேகாலயாவின் ஷில்லாங்கை தலைமையிடமாக வைத்து செயல்படும் கிழக்கு விமானப்படை பிரிவு அறிவிப்பு வெளியிட்டது.
யு.எப்.ஓ., எனப்படும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருள், வேற்று கிரகவாசிகளால் பயன்படுத்தப்படும் பறக்கும் சாதனம் என்ற பொதுவான கருத்து உள்ளது.
இது போன்ற யு.எப்.ஓ.,க்கள் அமெரிக்கா போன்ற நாடுகளில் அடிக்கடி தென்படுவது வழக்கம்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்