Doctor Vikatan: கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு எனக்கு வைரஸ் காய்ச்சல் வந்தது. மருத்துவரைப் பார்த்து சிகிச்சை எடுத்துக்கொண்டதில் காய்ச்சலும் ஜலதோஷமும் குணமாகிவிட்டன. ஆனால் ஒரு மாதமாகியும் இருமல் மட்டும் விட்டபாடாக இல்லை. இருமல் மருந்து எடுத்துக்கொண்டும் பலனில்லை. இதற்கு என்ன காரணம்…. இருமலுக்கு சிகிச்சை எடுக்க வேண்டுமா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்
சென்னை போன்ற கடற்கரை நகரங்களில் கடல்காற்று 12 மணியிலிருந்தே வீச ஆரம்பிக்கிறது. அதனால் நகரத்தில் குளிர்ச்சியான ஒரு சூழல் நிலவுகிறது.
சூடான காற்றுதான் மேல்நோக்கிப் போகும். இப்போதைய சூழலில் வெயிலின் தாக்கம் குறைவாக இருப்பதாலும், தீபாவளிக்குப் பிறகு காற்று மாசு அதிகரித்திருப்பதாலும் பகல் 12 மணிக்கு மேல் தூசு, வாகனப் புகை, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் மாசு போன்றவற்றின் காரணமாகவும் காற்று மேல்நோக்கிப் போகாமல் கீழேயே தங்கி இருக்கும்.
குறிப்பாக போக்குவரத்து நெரிசலில் சிக்னலில் நிற்போருக்கு கிட்டத்தட்ட வாயு மண்டலத்தில் நிற்பது போன்றுதான் இருக்கும். வெயில் காலத்தில் அதே போக்குவரத்து நெரிசலில் நிற்கும்போது புகை, காற்றெல்லாம் மேலே போய்விடும். மழை மற்றும் குளிர்காலங்களில் அந்தக் காற்றானது கீழேயே சுற்றிக்கொண்டிருக்கும். ஏற்கெனவே வாகனங்கள் விட்டுச்சென்ற புகையும் தூசும் மாசும் அங்கேயேதான் இருக்கும்.
எனவே வாகனங்களில் பயணிப்போர் மாஸ்க் அணிவது, ஃபில்டர் வைத்த ஹெல்மெட் அணிவது போன்றவற்றை அவசியம் பின்பற்ற வேண்டும். அப்படிச் செய்யாததால் காற்றின் தாக்கம் காரணமாகவே நீண்டகால இருமலும் சளியும் நீடிக்கின்றன. ‘ஈஸ்னோஃபிலிக் காஃப்’ (eosinophilic cough) என்று சொல்லக்கூடிய இருமல் ஒவ்வாமையால் ஏற்படுவது. இதற்கென தனியே மருந்துகள் இருக்கின்றன.
குடும்பநல மருத்துவர் பெரும்பாலும் 3 நாள்களுக்குத்தான் மருந்துகளைப் பரிந்துரைப்பார். அதன் பிறகு காய்ச்சல் குணமாகிவிட்டால் மருத்துவரைப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. அதாவது சளியும் காய்ச்சலும் போய்விட்டால், உங்களுடைய கிருமித்தொற்று பாதியாகக் குறைந்திருக்கக்கூடும்.
ஆரம்பகட்டத்திலேயே மருத்துவரிடம் செல்வோருக்கு 3-4 நாள்களிலேயே கிருமித்தொற்று முற்றிலும் குணமாகிவிடும். சிலருக்கு இருமல் தொடரலாம். இருமும்போது சளி சேர்ந்து வந்தால் தொற்று முற்றிலும் குணமாகவில்லை என்றே அர்த்தம்.
அந்த இருமல் தானாகச் சரியாகும் என்று அலட்சியமாக இருப்பதோ, எப்போதோ மருத்துவர் பரிந்துரைத்த இருமல் மருந்தை மீண்டும் எடுத்துக்கொள்வதோ மிகவும் தவறு. இருமல் தொடரும் பட்சத்தில் மீண்டும் மருத்துவரை சந்தித்து அதற்கான காரணம் அறிந்து, சிகிச்சை எடுப்பதுதான் தீர்வு.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.