விசாகப்பட்டினம்,ஆந்திராவில், மீன்பிடி துறைமுகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 35 மீன்பிடி படகுகள் முற்றிலும் எரிந்து நாசமாகின.
ஆந்திராவில், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர்., காங்., ஆட்சி நடக்கிறது.
இங்கு, விசாகப்பட்டினம் கன்டெய்னர் முனையம் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆலைக்கு அருகே உள்ள மீன்பிடி துறைமுகத்தில், பாலாஜி என்பவருக்கு சொந்தமான படகில், நேற்று முன்தினம் நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ, அருகே நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த மற்ற மீன்பிடி படகுகளுக்கும் மளமளவென பரவியது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மீட்புப் படையினர், இரண்டு மணி நேரத்துக்கும் மேல் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.
எனினும் இந்த தீ விபத்தில், 35 படகுகள் முற்றிலும் எரிந்து சேதம்அடைந்தன.
இதில் ஒரு படகின் மதிப்பு, 30 லட்சம் முதல் 50 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.
இது குறித்து போலீசார் கூறியதாவது:
தீ விபத்துக்குள்ளான மீன்பிடி படகுகளில் எரிபொருள், காஸ் சிலிண்டர் இருந்ததால், தீயை கட்டுப்படுத்த அதிக நேரம் தேவைப்பட்டது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்து, விபத்துக்கான காரணத்தை விசாரித்து வருகிறோம்.
முதற்கட்ட விசாரணையில், பணப் பரிவர்த்தனை தொடர்பாக இரு தரப்பினரிடையே வாக்குவாதம் நடந்ததாக தெரிய வந்துள்ளது. தீ விபத்தில் இவர்களுக்கு தொடர்புள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதற்கிடையே, தீ விபத்து குறித்து உரிய விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி, அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்