புதுடில்லி, நெடுஞ்சாலைகளில், பாதசாரிகளின் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்,
‘நெடுஞ்சாலைகளில் மக்கள் சுற்றி திரிவதற்கு எந்த அனுமதியும் அளிக்க முடியாது’ என, கடுமையுடன் குறிப்பிட்டுள்ளது.
நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள், சஞ்சய் கிஷண் கவுல், சுதான்ஷு துலியா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வுகூறியுள்ளதாவது:
நெடுஞ்சாலைகளை கடக்கும் பாதசாரிகள் விபத்தில் சிக்கும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதனால், அவர்களுடைய பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுக்கக் கோரி இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலை என்பது, பாதசாரிகள் உலாவுவதற்கான இடமல்ல. பாதசாரிகளுக்கும், வாகனங்களுக்கும் இடையே இடைவெளி இருக்க வேண்டும் என்பதே நெடுஞ்சாலைகளின் நோக்கமாகும்.
‘நெடுஞ்சாலைகளில் நடப்பதற்கும், உலா வருவதற்கும் அனுமதிக்க வேண்டும். அவ்வாறு வரும்போது வாகனங்களை நிறுத்த வேண்டும்’ என்றும் நாளை கோரிக்கை வைப்பீர்கள். இதுபோன்ற கோரிக்கைகளை எப்படி ஏற்க முடியும்?
பாதசாரிகள் ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும். விதிகளை மீறும் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க அனுமதித்தால், விதிகளை மீறுவதற்கு அனுமதி அளிப்பதாக அமைந்துவிடும். அதனால், இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement