ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், தமிழ்நாட்டில் புதிய பேட்டரி ஒருங்கிணைக்கும் தொழிற்சாலையை நிறுவ ரூ.700 கோடி முதலீட்டில் துவங்க உள்ளது. இந்திய சந்தையில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு சந்தை தற்பொழுது 2% உள்ள நிலையில் அடுத்து வரும் ஆண்டுகளில் விற்பனை எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதனால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள உள்நாட்டில் உற்பத்தி திறனை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
EV செலவுகள் குறைக்க மிக முக்கியமாக உள்ளூர்மயமாக்கல்தான் அதற்கு மிகப்பெரிய வழியாகும். பேட்டரி பேக்குகளின் உள்ளூர்மயமாக்கல் ஹூண்டாய் இந்தியாவிற்கு மிகப் பெரிய தூண்டுதலாக இருக்கும். எனவே 2030 ஆண்டிற்க்குள் 20-22% வாகனங்கள் மின்சார வாகனங்களாக இருக்கலாம் என்று ஹூண்டாய் குறிப்பிட்டுள்ளது.
Hyundai Battery Plant
ஹூண்டாய் இந்தியா நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய பயணிகள் வாகன தயாரிப்பாளராக உள்ள நிலையில், தற்பொழுது கோனா எலக்ட்ரிக் காரை விற்பனை செய்து வரும் நிலையில், அடுத்து கிரெட்டா எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்யவும், எக்ஸ்டர் எலக்ட்ரிக் போன்றவற்றை திட்டமிட்டுள்ளது.
“தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள எங்களின் பேட்டரி அசெம்பிளி ஆலையில் 700 கோடி ரூபாய் முதலீடு செய்கிறோம், இது 2025 ஆம் ஆண்டு முதல் கட்டமாக ஆண்டுதோறும் 75,000 பேட்டரி பேக்குகள் திறன் கொண்டதாக இருக்கும்” என்று ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் தலைமை உற்பத்தி அதிகாரி கோபால கிருஷ்ணன் கூறினார்.
டாடா மோட்டார்ஸ் எலக்ட்ரிக் கார் சந்தையில் அமோக வரவேற்பினை கொண்டுள்ள நிலையில், 2024-2025 ஆம் ஆண்டிற்குள் நாட்டின் பெரும்பாலான பயணிகள் வாகன தயாரிப்பாளர்களான மாருதி சுசூகி, மஹிந்திரா தங்கள் பேட்டரி மின்சார வாகனங்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளன.
2025 ஆம் ஆண்டில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது.
source – livemint.com