‘தலைவி’ படத்திற்குப் பிறகு கங்கனா ரணாவத்துடன் கைகோர்த்துள்ளார் இயக்குநர் ஏ.எல்.விஜய். அவர் இப்போது அருண் விஜய்யை வைத்து ‘மிஷன் 1, அச்சம் என்பது இல்லையே’ என்ற படத்தை இயக்கி முடித்துவிட்டார். இந்தப் படத்தின் மூலம் ஏமி ஜாக்சன் தமிழில் ரீ-என்ட்ரி ஆகிறார். இதன் பெரும் பகுதி படப்பிடிப்பு லண்டனில் நடந்து முடிந்திருக்கிறது. இதற்கிடையே ‘ரங்கோலி’ என்ற படத்தைத் தயாரித்திருந்தார். இதில் ஏ.எல்.விஜய்யின் தங்கை மகன் ஹமரேஷ் ஹீரோவாக அறிமுகமானார். ‘தெய்வத் திருமகள்’, ‘மாநகரம்’ எனப் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் இவர்.
‘ரங்கோலி’யை அடுத்து இன்னொரு படத்தையும் தயாரித்து வருகிறார் இயக்குநர் விஜய். ‘கிளாப்’ படத் தயாரிப்பாளர் ராஜசேகர், நடிகர் பிரகாஷ்ராஜ் ஆகியோரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். இன்னமும் தலைப்பு வைக்கப்படாமல் இருக்கும் இந்தப் படத்தை ‘ரங்கோலி’ இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கியிருக்கிறார். இதில் பிரகாஷ்ராஜ், வாணி போஜன் உட்படப் பலர் நடித்துள்ளனர்.
இதற்கிடையே ஏமி ஜாக்சன் படமான ‘மிஷன் 1’ படத்தை அடுத்து இயக்குநர் விஜய், அனுஷ்காவை வைத்து ஒரு படம் இயக்குவதாக இருந்தது. ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ படத்திற்கு அடுத்து அனுஷ்கா நேரடி தமிழுக்கு வருகிறார். அதை ஏ.எல்.விஜய் இயக்குகிறார் என்ற பேச்சு இருந்தது. அதில் விஜய் சேதுபதி நடிப்பார் என்றும் சொல்லி வந்தனர். இந்நிலையில்தான் விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் மீண்டும் நடிக்கிறார்.
‘தலைவி’ படத்திற்குப் பின் கங்கனா தமிழில் ‘சந்திரமுகி 2’ல் நடித்திருந்தார். தென்னிந்தியப் படங்களின் ஒர்க்கிங் ஸடைல் மற்றும் உணவுகள் கங்கனாவுக்கு மிகவும் பிடித்துப் போனதால், தமிழில் தொடர்ந்து நடிக்கும் எண்ணத்தில் இருக்கிறார். விஜய் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதிக்குப் பதில் மாதவன் திடீரென கமிட்டானதும், இதை பேன் இந்தியா படமாகக் கொண்டு போக நினைத்த விஜய், உடனே கங்கனாவிடம் பேசினார். இப்போது அதன் படப்பிடிப்பு பரபரப்பாகப் போய்க்கொண்டிருக்கிறது.
சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் இதன் படப்பிடிப்பு நடந்து போது, அருகே ரஜினி நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கி வரும் `தலைவர் 170′ படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. பக்கத்துத் தளத்தில் கங்கனாவின் படப்பிடிப்பு நடக்கிறது எனக் கேள்விப்பட்ட ரஜினி, உடனே நேரில் சென்று கங்கனாவைச் சந்தித்து, தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். தற்போதும் சென்னையில் படப்பிடிப்பு போய்க்கொண்டிருக்கிறது.
இப்போது சஷிகாந்த் இயக்கத்தில் சித்தார்த், நயன்தாராவுடன் ‘டெஸ்ட்’ என்ற படத்தில் நடித்து வரும் மாதவன், விஜய்யின் படப்பிடிப்பில் இன்னும் சில தினங்களில் பங்கேற்பார் என்று தகவல். அடுத்த கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெறும் என்றும் இந்தப் படம் க்ரைம் த்ரில்லராக உருவாகி வருகிறது என்றும் சொல்கிறார்கள்.