சில்க்யாரா சுரங்கத்தில் சிக்கியுள்ள, 41 தொழிலாளர்களுக்கு உணவு உள்ளிட்ட பொருட்களை வழங்க ஏற்கனவே, 4 அங்குல அகலமுள்ள குழாய், இடிபாடுகளுக்குள் செலுத்தப்பட்டிருந்தது.
இதன் வழியாக ஆக்சிஜன், மருந்து, உலர் பழங்கள் உள்ளிட்டவை தொழிலாளர்களுக்கு செலுத்தப்பட்டு வந்தன. தற்போது, 6 அங்குல அகலமுள்ள புதிய குழாய், இடிபாடுகளுக்கு இடையே வெற்றிகரமாக செலுத்தப்பட்டு உள்ளது.
இது குறித்து, தேசிய நெடுஞ்சாலை கட்டுமான ஆணைய இயக்குனர் அன்ஷுல் கால்கோ கூறியதாவது:
தற்போது செலுத்தப்பட்டுள்ள புதிய குழாய் வழியாக, உள்ளே சிக்கிய தொழிலாளர்களுக்கு ரொட்டி, சப்ஜி, துண்டுகளாக்கப்பட்ட ஆப்பிள், வாழைப்பழம் உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளன.
மேலும், தொழிலாளர்களுக்கு மொபைல் போன்கள் வழங்கப்பட உள்ளது. இதன் வாயிலாக உள்ளே இருக்கும் தொழிலாளர்களுடன் பேசவும், அவர்களை கண்காணிக்கவும் முடியும். தற்போது தொழிலாளர்களுடன் அவர்களது உறவினர்கள், ‘வாக்கிடாக்கி’ வாயிலாக அவ்வப்போது பேசி வருகின்றனர்.
அறுவை சிகிச்சைக்கு பயன்படும், கேமராவுடன் கூடிய ‘எண்டோஸ்கோபி’ கருவி போல, புதுடில்லியில் இருந்து ஒரு கருவி வரவுள்ளது.
இதை குழாயிக்குள் செலுத்தி, தொழிலாளர்களும், மீட்புப் படையினரும் தொடர்பு கொள்ள வசதி ஏற்படுத்தப்படும்.
ரோபோக்களை பயன்படுத்தலாமா என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
சில்க்யாரா சுரங்கப்பாதையில் நடந்து வரும் மீட்புப் பணிகள் குறித்து, முதல்வர் புஷ்கர் சிங் தாமியிடம், தொலைபேசியில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக கேட்டறிந்தார்.
அப்போது, ‘சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களின் மன உறுதியை நிலைநாட்ட வேண்டும். எக்காரணத்தை கொண்டும் அவர்கள் நம்பிக்கையை இழக்கக்கூடாது’ என, பிரதமர் தெரிவித்தார்.
கேமராவை செலுத்த திட்டம்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்