Philippines: `வெறுங்கால்களில் ஓடி இரண்டு தங்கம்; ஒரு வெண்கலம்' சாதித்த 71 வயது பெண்!

இலங்கையைச் சேர்ந்த  அகிலா திருநாயகி என்பவர் தனது 71 வயதில்  இரண்டு தங்கப்பதக்கங்களையும்,  ஒரு வெண்கலமும் வென்று சாதனைப்  படைத்திருக்கிறார்.   

பிலிப்பைன்ஸ் நாட்டில் மாஸ்டர்ஸ் தடகள சம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றது. அந்தத் தொடரில் இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த  அகிலா திருநாயகி பங்கேற்றிருக்கிறார்.  71 வயதான இவர் 1500 மீட்டர் மற்றும் 5000 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கங்களை வென்றிருக்கிறார். அதுமட்டுமின்றி 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்திலும்  வெண்கலம் வென்று  சாதனைப் படைத்து இலங்கை மண்ணிற்கு பெருமைச் சேர்த்திருக்கிறார்.  

400 மீட்டர் ஓட்டப் பந்தயத்திலும் பங்கேற்றிருந்த அவர் அதில் நான்காவது இடத்தினைப் பெற்றிருக்கிறார்.  71 வயதில் சாதித்த  அகிலா திருநாயகி சாதிக்க வயது ஒரு தடை இல்லை என்பதனை அனைவருக்கும்  மீண்டும் ஒரு முறை உணர்த்தி இருக்கிறார்.  இவருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். அகிலா திருநாயகி சிறைச்சாலை அதிகாரியாக பணியாற்றி ஓய்வுப்  பெற்றவர் என்பதோடு மிக முக்கியமாக இந்த சாதனையை அவர் Barefoot எனப்படும் காலணிகள் அணியாமல் வெறும் காலில் ஓடி நிகழ்த்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

`சிறுவயதில் முல்லைத் தீவில் வெறும் காலில் நடந்து பாடசாலைக்கு சென்ற அனுபவம் தான் எனக்கு இந்த வயதில் பதக்கங்களை பெற உதவியிருக்கிறது!’ என்று இலங்கை ஊடகங்களில் சொல்லியிருக்கிறார் அகிலா திருநாயகி!

தடைக் கற்களை படிக்கல்லாக்கிய அகிலா திருநாயகி அகிலமே கொண்டாடப்பட வேண்டிய சாதனைப் பெண்மணி தான்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.