ஜல்லி மற்றும் எம் சாண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருள்களின் விலை உயர்வு அமலுக்கு வருவதாக கோவை மாவட்ட கிரஷர் மற்றும் குவாரிகள் சங்கத்தின் தலைவர் சந்திர பிரகாஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோவை மாவட்டத்தில் கனிம வளத்துறையின் அனுமதி சீட்டு ஒரு கன அடிக்கு ரூ.59 என இருந்த நிலையில் தற்போது ரூ.90 ஆக அதிகரித்துள்ளது. வாகன உதிரி பாகங்களின் விலை 40 சதவீதம், மின் கட்டணம் 36 சதவீதம் உயர்ந்துள்ளது.

அதேபோல் வெளி மாநில தொழிலாளர்களின் பற்றாக்குறையால் அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியமும் உயர்ந்துள்ளது. குவாரி நிலங்களின் விலையும் மூன்று மடங்கு அதிகரித்து விட்டது. குவாரிகளை அளவீடு செய்து அபரிமிதமான அபராத தொகை விதிக்கப்படுகிறது. இது போன்ற காரணங்களால் குவாரி தொழில் நலிவடைந்து வருகிறது. பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே கட்டுமான துறைக்கு ஆதாரமாக இருக்கும் இந்த தொழிலை காப்பாற்ற மிக சிறிய அளவிலான விலையேற்றம் தவிர்க்க முடியாததாகி விட்டது. இதனால் நவம்பர் 27 முதல் மாவட்ட அளவில் எம் சாண்ட் விலை யூனிட் ஒன்றுக்கு ரூ.4,500, பி சாண்ட் ரூ.5000, 20, 12 மற்றும் 6 சைஸ் ஜல்லி ரூ.3,700, ஜிஎஸ்பி டஸ்ட் ரூ.3,700 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

20 கி.மீ தொலைவுக்கு லாரி வாடகையுடன் இந்த விலை உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. கட்டுமான தொழில் அமைப்புகள் இந்த கட்டண உயர்வுக்கு ஆதரவு தர வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.