புதுடெல்லி: வெறுப்பு பேச்சுகளால் ஏற்படும் வன்முறையை கட்டுப்படுத்தும் நெறிமுறைகளை செயல்படுத்த நோடல் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டார்களா, இல்லையா என்பது குறித்து தமிழகம், கேரளா, நாகாலாந்து, குஜராத் ஆகிய மாநில அரசுகள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வெறுப்பு பேச்சினால் ஏற்படும் வன்முறைகளை தடுத்து, கட்டுப்படுத்தும் வகையில், பூனாவாலா வழக்கின் உச்ச நீதிமன்ற நெறிமுறைகளை அமல்படுத்த நோடல் அதிகாரிகளை நியமன செய்ய உத்தரவிட்ட விவகாரம் தொடர்பான மனுக்கள் இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் எஸ்.வி.என்.பட்டி அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், “உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, 28 மாநிலங்கள் நோடல் அதிகாரிகளை நியமித்துள்ளது. குஜராத், கேரளா, நாகாலாந்து, தமிழகம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் மத்திய அரசின் கடிதத்துக்கு பதிலளிக்கவில்லை. அவர்கள் நோடல் அதிகாரிகளை நியமனம் செய்தார்களா, இல்லையா என்பது தெரியவில்லை. மேலும், வெறுப்பு பேச்சு விவகாரம் தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுடன் மத்திய உள்துறை செயலர் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவித்தார். அப்போது மேற்கு வங்க அரசு வழக்கறிஞர், நோடல் அதிகாரி நியமனம் தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என்றார்.
இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “அனைத்து மாநிலங்களும் இந்த விவகாரத்தில் பதிலளிக்காமல், உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க இயலாது. 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தவிர மற்ற மாநிலங்கள் ஏன் பதிலளிக்கவில்லை?” என்று கேள்வி எழுப்பினர். மேலும், வெறுப்பு பேச்சுகளால் ஏற்படும் வன்முறையை கட்டுப்படுத்தும் நெறிமுறைகளை செய்யல்படுத்த நோடல் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டார்களா, இல்லையா என்பது குறித்து தமிழகம், கேரளா, நாகாலாந்து, குஜராத் ஆகிய மாநில அரசுகள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர். பின்னர் இந்த வழக்கின் விசாரணையை பிப்ரவரி 5 -ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
அமைச்சர் உதயநிதி மீது… – அப்போது வழக்கறிஞர் அஜித் சார்பில் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தை ஏன் நீங்கள் அணுகக் கூடாது? என கேள்வி எழுப்பினர். அதற்கு, நிலுவையில் உள்ள அமைச்சர் உதயநிதியின் வழக்கை சுட்டிக்காட்டி பதிலளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், “சனாதன விவகாரத்தில் ஏற்கெனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வெறுப்பைத் தூண்டும் வகையில், மாநில அமைச்சர் ஒருவர் பேசுவது ஏற்புடையதல்ல. எனவே, உடனடியாக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில், தற்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என மறுத்துவிட்டனர். மேலும், “தனிப்பட்ட நபர்களின் வழக்குகளை வெறுப்பு பேச்சு வழக்குடன் சேர்த்து விசாரிக்கத் தொடங்கினால், மேலும் பத்து, இருபது அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்படும். இதனால், தினந்தோறும் இதுபோன்ற வழக்குகளை விசாரிக்க வேண்டிய நிலை வரும். இந்தியா முழுவதும் வெறுப்பு பேச்சுக்களால் ஏற்படும் வன்முறையை தடுக்கும் வகையில் நெறிமுறைகளை கொண்டுவர முயற்சித்து வருகிறோம். எனவே, தனிநபர் வழக்குகள் விசாரணைக்கு பட்டியலிடும் போது விசாரிக்கப்படும்” என்று தெரிவித்தனர்.