வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : மசோதாக்கள் குறித்து விவாதிக்க, முதல்வர் பினராயி விஜயன் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களை சந்திக்கும்படி, கேரள கவர்னர் ஆரிப் முகமது கானுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த, முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.
இங்கு, மாநில அரசுக்கும், கவர்னர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே துவக்கம் முதலே மோதல் நிலவி வருகிறது. சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தர கவர்னர் மறுப்பதாகவும், மசோதாக்கள் மீது உரிய காலக்கெடுவில் ஒப்புதல் அல்லது மறுப்பு
தெரிவிப்பது தொடர்பாக, கவர்னருக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கக் கோரியும், உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இதற்கிடையே, சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்ட எட்டு மசோதாக்களில், ஒரு மசோதாவுக்கு மட்டும் கவர்னர் ஆரிப் முகமது கான் நேற்று முன்தினம் ஒப்புதல் வழங்கினார்.
மற்ற ஏழு மசோதாக்களும் ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கவர்னர் சார்பில் ஆஜரான அட்டர்னி
ஜெனரல் ஆர்.வெங்கடரமணி, ”எட்டு மசோதாக்களில், ஏழு மசோதாக்கள் ஜனாதிபதி பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஒரு மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்,” என்றார்.
இதை கவனத்தில் எடுத்துக் கொண்ட பின், அமர்வு கூறியதாவது:மசோதாக்கள் குறித்து விவாதிக்க, முதல்வர் பினராயி விஜயன் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களை, கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் சந்திக்க வேண்டும்.இதன் வாயிலாக பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என, நம்புகிறோம்.
இல்லையெனில், நாங்கள் சட்டத்தை வகுத்து, அரசியலமைப்பின் கீழ் எங்கள் கடமையைச் செய்வோம்.இவ்வாறு அமர்வு கூறியது.இதற்கிடையே, கேரள அரசின் மனுவில் திருத்தம் செய்யவும் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement