டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் சுரங்கத்திற்குள் சிக்கியவர்கள் , உள்ளே என்ன நடந்தது, மனநிலை எப்படி இருந்தது, பொழுது போனது என்பது குறித்து பேட்டி அளித்து உள்ளனர்.
உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசியில் சுரங்கம் தோண்டும் பணியின் போது அதன் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. 17 நாட்களாக உள்ளே சிக்கியிருந்த 41 தொழிலாளர்கள் நீண்ட முயற்சிக்கு பின் நேற்று வெற்றிகரமாக மீட்கப்பட்டனர். மீட்ட அதிகாரிகளுக்கு பாராட்டு குவிந்து வருகிறது. மீட்கப்பட்டவர்கள், மருத்துவ பரிசோதனைக்காக விமானப்படை விமானம் மூலம் ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், சுரங்கத்தில் என்ன நடந்தது, எப்படி இருந்தோம் என்பது குறித்து தொழிலாளர்கள் பேட்டி அளித்துள்ளனர்.
அகிலேஷ் சிங் என்ற தொழிலாளி கூறுகையில், எனது கண் முன்னரே சுரங்கம் இடிந்து விழுந்தது. அப்போது ஏற்பட்ட அதிக சத்தத்தால் காதில் பாதிப்பு ஏற்பட்டது. முதல் 18 மணி நேரம் வெளி உலகுடன் எந்த தொடர்பும் இல்லை. எங்களுக்கு அளித்த பயிற்சியின்படி, இடிபாடுகளுக்குள் சிக்கியதை வெளி உலகிற்கு தெரிவிக்க தண்ணீர் குழாயை திறந்துவிட்டோம்.
தண்ணீர் விழும் சத்தத்தை கேட்ட பிறகு தான், வெளியில் இருந்தவர்களுக்கு, நாங்கள் சிக்கி கொண்டது தெரியவந்தது. இதனையடுத்து இடிபாடுகளுக்கு இடையே இரும்பு பைப் அமைத்து ஆக்ஸிஜன் மற்றும் உணவு அனுப்பினர்.
அதிகளவு உணவு அனுப்பி வைத்தனர். உள்ளே இன்னும் 25 நாட்களுக்கு தேவையான உணவு இருக்கிறது. மருத்துவ பரிசோதனைக்கு பிறகு வீட்டிற்கு சென்று 1 அல்லது 2 மாதம் ஓய்வு எடுக்க உள்ளேன். அதன் பிறகு தான் அடுத்து என்ன செய்யலாம் என முடிவு செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்
விஸ்வஜீத் குமார் வெர்மா(41) என்பவர் கூறுகையில், முதல் 10 – 15 மணி நேரம் கடினமாக இருந்தது. பிறகு பைப் அமைத்து அரிசி, பருப்பு மற்றும் உலர் பழங்களை அனுப்பி வைத்தனர். பிறகு மைக் பொருத்தி குடும்பத்துடன் பேச வைத்தனர். தற்போது மகிழ்ச்சியாக உள்ளேன். தீபாவளியை கொண்டாட உள்ளேன் என்றார்.
புஷ்கர் சிங் ஆரி என்பவர் கூறுகையில், மீட்பு படையினர் எங்களை தொடர்பு கொள்ளும் வரையில் சூழ்நிலை கடினமாக தான் இருந்தது. எங்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. நாங்கள் சிக்கியிருந்த ஒரு இடத்தில் மின்சாரம் இருந்தது. ஆனால், ஆக்ஸிஜன் இல்லை. மலைமேல் இருந்து கசியும் நீர் மட்டுமே குடிநீருக்கான ஆதாரமாக இருந்தது.
இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களில் அதிகம் பேர் இளம் வயதினர். ஆனால் அனுபவம் பெற்றவர்கள். ஒருவருக்கு ஒருவர் ஆறுதலும் நம்பிக்கையும் தெரிவித்து கொண்டோம். சிலர் தண்ணீர் சேகரித்து வந்தனர். வேறு சிலர் படுக்கையை ஏற்பாடு செய்தனர். உள்ளே இருந்தவர்களில் பிளம்பர்கள், மிஷின் இயக்குபவர்கள் இருந்தனர்.
அவர்களின் அனுபவம் கை கொடுத்தது. உணவு மற்றும் ஆக்ஸிஜன் கிடைத்ததும் சீட்டு விளையாடினோம். ராஜா மந்திரி, திருடன் போலீஸ் விளையாட்டு விளையாடி எங்கள் குழந்தை பருவத்திற்கு சென்றோம்.
சுரங்கத்தில் இருந்தவர்களில் கப்பார் சிங் நெகி மற்றும் சபா அஹமது ஆகியோர் சீனியர்கள். அனைவரும் வெளியேறியதை உறுதி செய்த பிறகு கடைசியாக அவர்கள் வெளியே வந்தனர். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்