இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையைத் தொடர்ந்து, மோதல் போக்கு நீடிக்கிறது. இரு நாடுகளும் விசா வழங்குவதை நிறுத்திவைத்திருக்கின்றன. இந்தியாவிலிருக்கும் 40-க்கும் மேற்பட்ட கனடா தூதர்கள் வெளியேற்றப்பட்டனர். தங்கள் நாட்டு மக்களுக்கு உண்மையாக இருக்க விரும்புவதாகக் கூறும் கனடா பிரதமர், ஹர்தீப் சிங் கொலை விவகாரத்தில், இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என வலியுறுத்திவருகிறார். `கனடா குடிமகன் கொலைசெய்யப்பட்ட விவகாரத்தில், இந்திய அரசின் ஏஜென்ட்டுகள் ஈடுபட்டிருக்கிறார்கள்’ என்ற கனடாவின் குற்றச்சாட்டு, இந்தியா – கனடாவுக்கிடையே பெரும் உறவுச் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.
அதைத் தொடர்ந்து, அமெரிக்காவில், காலிஸ்தான் ஆதரவுத் தலைவரும், அமெரிக்கா-கனடாவின் இரட்டைக் குடியுரிமை பெற்றவருமான குர்பத்வந்த் சிங் பன்னூன் என்பவரைக் கொலைசெய்யச் சதித்திட்டம் நடைபெற்றதாகவும், அதை அமெரிக்கா முறியடித்ததாகவும் அமெரிக்காவும், இந்தியாவுக்கு எதிராக ஒரு குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறது. இது குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், `அமெரிக்க மண்ணில் சீக்கிய காலிஸ்தான் ஆதரவாளரைக் கொல்வதற்காக நடந்த சதித்திட்டத்தை அமெரிக்கா மிகுந்த தீவிரத்துடன் எதிர்கொண்டிருக்கிறது.
சீக்கியர்களுக்கான தனிநாடு கோரிக்கையை முன்வைத்துச் செயல்படும் நியூயார்க் நகரவாசியைப் படுகொலை செய்வதற்கான சதித்திட்டத்தில், பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை உள்ளிட்ட பொறுப்புகளை வகிக்கும் இந்திய அரசு ஊழியர் ஒருவருடன் 52 வயது நபர் பணிபுரிந்த தகவலும் கிடைத்திருக்கிறது. இது குறித்து இந்திய அரசிடம் கேள்விகளை எழுப்பியிருக்கிறோம். அமெரிக்க மண்ணில் நடந்த சீக்கியர்மீதான கொலை முயற்சி ஆச்சர்யத்தையும் கவலையையும் ஏற்படுத்துகிறது’ எனத் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “அமெரிக்காவிலிருந்து வெளிவரும் செய்திகள் அனைத்தும், ஆரம்பத்திலிருந்தே நாம் பேசி வருவதை மேலும் உறுதிப்படுத்துகின்றன. இதை இந்தியா பெரிதாக எடுத்துக்கொண்டதாகத் தெரியவில்லை. எனவே, இந்தியா இதைத் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்திருக்கிறார்.