`பருத்திவீரன்’ படம் குறித்தும் இயக்குநர் அமீர் குறித்தும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசியது கோலிவுட்டில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்த விவகாரத்தில் இயக்குநர் அமீர் மீது ஞானவேல்ராஜா முன் வைத்த குற்றச்சாட்டுகள் போலியானது என்றும் அவர் பயன்படுத்திய வார்த்தைகள் கண்டிக்கத்தக்கது என்றும் கோலிவுட்டில் நன் மதிப்பைப் பெற்ற இயக்குநர்கள் பலரும் அமீருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகின்றனர். மேலும், இது குறித்து ஞானவேல்ராஜா உரிய விளக்கமளித்து, மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று உறுதியாகக் கூறி வருகின்றனர் அமீரின் ஆதரவாளர்கள்.
இதையடுத்து ஞானவேல் ராஜா, “சமீபத்திய பேட்டிகளில் இயக்குநர் அமீர் என் மீது சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தின. அதற்குப் பதில் அளிக்கும் போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவர் மனதைப் புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியிருந்தார்.
ஆனால் ஞானவேல் ராஜா, இயக்குநர் அமீர் மீது வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து சரியான விளக்கமளிக்கவில்லை. அவர் பயன்படுத்திய வார்த்தைகள் தவறு என்று ஒப்புக்கொள்ளாமல் மொட்டையாக ‘புண்படுத்தியிருந்தால் வருந்துகிறேன்’ என்று கூறுவதை ஏற்கமுடியாது என்று பலரும் கூறிவருகின்றனர். அவ்வகையில் இயக்குநர் சசிகுமாரும், ஞானவேலின் இந்த வருத்தத்தை ஏற்க முடியாது என்று தெரிவித்திருந்தார்.
இதையடுத்துத் தற்போது சமுத்திரக்கனியும் ஞானவேலின் வருத்தத்தை ஏற்க மறுத்து, “பிரதர்… இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது… நீங்க செய்ய வேண்டியது, எந்த பொதுவெளியில எகத்தாளமா உக்காந்து கிட்டு அருவருப்பான உடல் மொழியால சேற்ற வாரி இறைச்சீங்களோ. அதே பொது வெளியில் பகிரங்கமா மன்னிப்பு கேக்கணும்..!
நீங்க கொடுத்த அந்தக் கேவலமான, தரங்கெட்ட இன்டெர்வியூ-வை சமூக வலைதளங்களில் இருந்து துடைச்சு தூர எறியணும்..!அன்னைக்கு கொடுக்காம ஏமாத்திட்டுப் போன பணத்தை ஒத்த பைசா பாக்கி இல்லாம திருப்பிக் கொடுக்கணும். ஏன்னா… கடனா வாங்குன நிறைய பேருக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டியது இருக்கு. அப்புறம் ‘பருத்திவீரன்’ திரைப்படத்தில வேலை பார்த்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பல பேருக்கு இன்னும் சம்பள பாக்கி இருக்கு. பாவம்… அவங்கெல்லாம் எளிமையான குடும்பத்துல இருந்து வந்து வேல பாத்தவங்க… நீங்கதான், ‘அம்பானி பேமிலியாச்சே..!’ காலம் கடந்த நீதி..! மறுக்கப்பட்ட நீதி!” என்று கூறியுள்ளார்.