இயக்குனராக மாறிய ஊர்வசியின் கணவர்
எண்பதுகளில் கதாநாயகியாக நடிக்க துவங்கி, அதன்பிறகு காமெடி கலந்த கதாபாத்திரங்களையும், பின்னர் குணசத்திர நடிகையாகவும் தனது திரையுலக பயணத்தில் இப்போது வரை தொடர்ந்து பயணித்து வருபவர் நடிகை ஊர்வசி. மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயனை திருமணம் செய்து கொண்ட ஊர்வசி பின்னர் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தார் அதன் பிறகு சில வருடங்கள் கழித்து சிவபிரசாத் என்கிற கட்டட கான்ட்ராக்டர் ஒருவரை இரண்டாவதாக மறுமணம் செய்து கொண்டார் ஊர்வசி.
இந்த நிலையில் ஊர்வசியின் கணவர் சிவபிரசாத் முதன்முறையாக இயக்குனராக திரை உலகில் தனது முதல் அடியை எடுத்து வைத்துள்ளார். இவர் இயக்கி வரும் படத்திற்கு 'எல்.ஜெகதாம்மா ஏழாம் கிளாஸ் பி ஸ்டேட் பர்ஸ்ட்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. முற்றிலும் புது முகங்கள் நடிப்பில் உருவாக்கப்பட்டு வரும் இந்த படத்தில் நடிகை ஊர்வசியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமல்ல ஊர்வசியின் சகோதரியான மறைந்த நடிகை கல்பனாவின் மகள் ஸ்ரீமயி இந்த படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.