ஈரோடு: ஈரோடு அருகே தனியார் பனியன் நிறுவன ஊழியர்களுடன் சென்ற பேருந்து மீது, அரசு பேருந்து மோதியதில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் செயல்பட்டு வரும் தனியார் பனியன் நிறுவனத்தை சேர்ந்த பேருந்து, பணியாளர்களை ஏற்றிக் கொண்டு, வியாழக்கிழமை இரவு 9 மணியளவில், ஈரோடு நோக்கி சென்று கொண்டு இருந்தது. அந்த பேருந்தை தொடர்ந்து அதே நிறுவனத்தை சேர்ந்த மற்றொரு பேருந்தும், திருப்பூரில் இருந்து ஈரோடு நோக்கி வந்த அரசு பேருந்தும் வந்து கொண்டு இருந்தன.
ஈரோடு – பெருந்துறை சாலையில், மூலக்கரை புதுப்பாளையம் பிரிவு அருகே, தனியார் நிறுவன பேருந்தின் பின்பகுதியில் அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பனியன் நிறுவன ஊழியர்கள் மற்றும் அரசு பேருந்து பயணிகள் உட்பட 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள், 108 ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கும், தனியார் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து ஈரோடு தாலுகா போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பேருந்துகள் மோதிய விபத்தால், ஈரோடு – பெருந்துறை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.