செங்கல்பட்டு: இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்குவதன் மூலம் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களை சமையலறை புகையிலிருந்து விடுவிக்கும் மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 37 லட்சம் குடும்பங்கள் பயனடைந்திருப்பதாக மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 58 இடங்களில் தொடங்கப்பட்ட மோடி உத்தரவாத யாத்திரையின் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் வட்டத்தில் உள்ள மின்னல் சித்தாமூர் கிராமத்தில் இன்று (30.11.2023) நடைபெற்ற நிகழ்வில் மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பங்கேற்றார். இவருடன் மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணையமைச்சர் ராமேஷ்வர் தெலியும் கலந்துகொண்டார். காணொலி காட்சிமூலம் பிரதமர் உரை நிகழ்த்தியதை அமைச்சர்களும், பொதுமக்களும் பார்வையிட்டனர்.
வேளாண் பணிகளில் பயன்படுத்துவதற்காக பெண்களுக்கு ட்ரோன்கள் வழங்கி பயிற்சி அளிக்கும் திட்டம், பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டத்தின் கீழ் சுமார் 81 கோடி பயனாளிகளுக்கு 2024-ம் ஆண்டு ஜனவரி 1 முதல் ஐந்து ஆண்டுகளுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டம், 10,000- ஆவது மக்கள் மருந்தக மையம் தொடங்குவது ஆகியவை பற்றி பிரதமர் காணொலி காட்சி உரையில் குறிப்பிட்டார்.
பின்னர் இந்த நிகழ்வில் பங்கேற்ற கிராம மக்களிடையே உரையாற்றிய மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி நாடு முழுவதும் 9 கோடியே 60 லட்சம் பேருக்கு உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டிருப்பதாகவும், இவற்றில் தமிழகத்தில் 37 லட்சம் இணைப்புகள் என்றும் கூறினார். ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மக்கள் மருந்தக மையங்கள் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருவதாகவும் இன்று 10,000-வது மையத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கிவைத்துள்ள நிலையில், இந்த எண்ணிக்கையை 25,000 ஆக அதிகரிக்க அரசு உத்தேசித்திருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
சமூகத்தில் ஏழைகள், விவசாயிகள், மகளிர், இளைஞர்கள் என்ற பிரிவினரின் தனிப்பட்ட முன்னேற்றத்திற்காக பிரதமர் மோடி தலைமையிலான அரசு பல சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருவதாக திரு பூரி கூறினார். வளர்ச்சியடைந்த இந்தியா என்பது இந்த 4 பிரிவினரின் முன்னேற்றத்தில் தான் அடங்கியுள்ளது என்றும் இதற்காகவே பல திட்டங்களை வகுத்து அரசு செயல்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதை உறுதிசெய்ய மோடி உத்தரவாத யாத்திரை நடத்தப்படுவதாகவும் அவர் கூறினார். ஏழை, எளிய மக்கள், விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்களை மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களின் பயனாளிகளாக மாற்றுவது இந்த யாத்திரையின் நோக்கம் என்றும் ஹர்தீப் சிங் பூரி குறிப்பிட்டார்.