உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் `மிக நீளமான முடியுடன் வாழும் நபர்’ (The longest hair on a living person) என கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார்.
நீளமான முடி என்பது பலருக்கும் எட்டாக் கனியாகக் கூட இருக்கலாம். முடி வளர்வதற்காக பிறர் சொல்வது, சமூக ஊடகங்களைப் பார்த்து எண்ணெய், ஷாம்பூ என உபயோகிப்பது என பல முறைகளைக் கையாண்டாலும், முளைக்கவே மாட்டேன் என முடியும் மல்லுக்கு நிற்பதுண்டு.
உத்தரப்பிரதேசத்தில் வசித்து வரும் 46 வயதான ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா தனது 14 வயதில் இருந்து தலைமுடியை வெட்டாமலே வளர்த்து வருகிறார். இப்போது அவரது தலைமுடி (236.22 சென்டிமீட்டர்) 7 அடி 9 அங்குலம் நீளம் உள்ளது.
நீளமான முடியின் ரகசியத்தைப் பகிர்ந்துள்ளவர், தனது தலைமுடியை வாரத்திற்கு இரண்டு முறை கழுவுவதாகக் கூறியுள்ளார். நீளமான முடியைக் கழுவவே 30 – 45 நிமிடங்கள் வரை ஆகிறது. இதனைத் தாண்டி தலையை உலர்த்தி, ஜடை போட மூன்று மணிநேரம் வரை பிடிக்கிறது.
ஒரு நாள் எனக்கு அதிகமாக முடி உதிர்வு ஏற்பட்டது. உதிரும் முடிகளை கீழே போடுவது என்னை இன்னும் வருத்தத்தில் ஆழ்த்தியது. அதிலிருந்து நான் எனது உதிரும் முடிகளை பாலிதீன் பைகளில் சேகரிக்கத் தொடங்கினேன். சுமார் 20 வருடங்களாக சேமித்து வருகிறேன். இப்போது என்னிடம் உதிர்ந்த நிறைய முடிகள் இருக்கின்றன.
1980-களில் இந்தி நடிகைகள் செய்து வந்த தனித்துவமான சிகை அலங்காரங்களால் ஈர்க்கப்பட்டேன். என் தலைமுடியைப் பார்க்கும் மக்கள் வியந்துபோவார்கள். சிலர் எனது தலைமுடியைத் தொட்டு என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வார்கள். கூந்தல் பராமரிப்புக்காக நான் பயன்படுத்தும் பொருள்களை பற்றியும் கேட்கிறார்கள்.
இந்திய கலாசாரத்தில், தெய்வங்கள் பாரம்பர்யமாக மிக நீளமான முடியைக் கொண்டிருந்தன. நம் சமூகத்தில், முடி வெட்டுவது அபசகுணமாக கருதப்படுகிறது, அதனால்தான் பெண்கள் முடியை வளர்க்கிறார்கள். நீண்ட முடி பெண்களின் அழகை மேலும் அதிகரிக்கிறது.
எனது தலைமுடியை இன்னும் வளர்க்க நான் ஆசைப்படுகிறேன். எவ்வளவு காலம் அதைப் பராமரிக்க முடியும் என்று பார்க்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.