உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கேப்டன் ரோஹித் வாய்ப்பளிக்கவில்லை -அஸ்வின்

ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டி: 2023 ஒருநாள் உலகக் கோப்பை (ODI World Cup 2023) தொடரை இந்தியா நடத்தியது. ஆனால், நவம்பர் 19 ஆம் தேதி நடந்த இறுதிப் போட்டியில் இந்திய அணியை ஆஸ்திரேலியா தோற்கடித்ததன் மூலம் கோடிக்கணக்கான இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கனவு கலைந்தது. நவம்பர் 19 அன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா தனது ஆறாவது ஒருநாள் உலகக் கோப்பையை வென்றது. ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி தோற்றத்தை அடுத்து, அதற்கு பின் நடந்த அந்த தருணத்தைப் பற்றி மூத்த வீரர் இந்திய அணியின் ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் பகிர்ந்துள்ளார். இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த பிறகு, கேப்டன் ரோஹித் சர்மாவும், ஸ்வாஷ்பக்லர் விராட் கோலியும் டிரஸ்ஸிங் ரூமில் அழத் தொடங்கினர். உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடிய பிளேயிங்-11ல் ரவிச்சந்திரன் அஸ்வினை சேர்க்கவில்லை என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

கட்டுப்படுத்த முடியாமல் கதறி அழுத இந்திய வீரர்கள் -அஸ்வின்

சமீபத்தில் அகமதாபாத்தில் நடந்த ஒருநாள் உலகக் கோப்பை (2023 Cricket World Cup) இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்த பிறகு, கேப்டன் ரோஹித் சர்மாவும் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலியும் டிரஸ்ஸிங் அறையில் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் கதறி அழுதனர் என்று இந்திய அணியின் ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார். இந்திய அணியின் தோல்விக்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடி (Prime Minister Narendra Modi) இந்திய அணி வீரர்களின் டிரஸ்ஸிங் அறைக்குச் சென்று கேப்டன் ரோஹித் சர்மா உட்ப்ட இந்திய வீரர்களை ஊக்கப்படுத்த முயன்றார். ஆனாலும் டிரஸ்ஸிங் அறையில் இருந்த சூழல் இதயத்தை ரணமாக்கி விடுவதாக இருந்தது என அஷ்வின் தெரிவித்துள்ளார். 

ரோஹித் சர்மா ஒரு நல்ல கேப்டன் மற்றும் பேட்ஸ்மேன் -பாராட்டிய அஷ்வின்

முன்னாள் கிரிக்கெட் வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத்துடன் தனது யூடியூப் சேனலில் உரையாடிய ரவிச்சந்திரன் அஸ்வின், ‘நாங்கள் வலியை உணர்ந்தோம். ரோஹித் மற்றும் விராட் இருவரின் கண்களிலும் கண்ணீர் வழிந்ததை பார்க்க மிகவும் வருத்தமாக இருந்தது. என்ன நடந்தாலும் இப்படி நடந்திருக்க கூடாது. அணி மிகவும் அனுபவம் வாய்ந்தது. என்ன செய்வது என்று அனைவருக்கும் தெரியும். இந்தியா உலகக் கோப்பையை வெல்லவில்லை என்றாலும், விராட் கோஹ்லி மற்றும் ரோஹித் சர்மா தங்கள் ஆக்ரோஷமான பேட்டிங்கால் ஈர்க்கப்பட்டனர். 

ரோஹித்தை ஒரு நல்ல பேட்ஸ்மேன் மற்றும் கேப்டன் என்று பாராட்டிய அஷ்வின், ‘இந்திய கிரிக்கெட்டைப் பொறுத்தவரை மகேந்திர சிங் தோனி (எம்.எஸ். தோனி) சிறந்த கேப்டன் என்று எல்லோரும் சொல்வார்கள். அதேநேரத்தில் ரோஹித் ஒரு அற்புதமான மனிதர். அணியில் உள்ள ஒவ்வொரு வீரரைப் பற்றியும் அவருக்கு நல்ல புரிதல்’ உள்ளது. ஒவ்வொரு வீரரின் விருப்பு வெறுப்புகளையும் ரோஹித்துக்கு தெரியும். மற்ற வீரர்கள் குறித்து அவரின் புரிதல் மிகவும் நன்றாக உள்ளது. ஒவ்வொரு வீரரையும் நன்கு புரிந்துகொள்ள அவர் தன்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறார் என ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஏன் விளையாடவில்லை?

அஸ்வின் உலகக் கோப்பையில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடினார். சென்னையில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் முதல் போட்டியில் 34 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். ஆனால் ரோஹித் ஏன் அவரை இறுதிப் போட்டியில் களமிறக்கவில்லை என்று அஷ்வினிடம் கேட்டபோது, ​​அவர் கேப்டன் ரோஹித்துக்கு ஆதரவாக பேசினார் மற்றும் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் அணியில் மாற்றங்களைச் செய்வது எளிதானது அல்ல என்றும் அஸ்வின் கூறினார்.

அவர் கூறுகையில், ‘நான் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் (Cricket World Cup) ஏன் விளையாடவில்லை என்பதை விட, அணியின் வெற்றி முக்கியமானது, அதன்பிறகு தான் மற்ற விஷயங்கள் வரும். தன்னைப் பற்றி மட்டும் யோசிக்காமல், வேறொருவரின் இடத்தில் நின்று அந்த நபரின் கண்ணோட்டத்தில் விஷயங்களைப் பார்ப்பது தான் சிறந்தது. அதாவது ரோஹித்தின் இடத்தில் நான் இருந்திருந்தால், தொடர்ச்சியாக வெற்றி பெற்று வரும் அணியில் மாற்றங்களைச் செய்வதற்கு முன் 100 முறை யோசித்திருப்பேன். அணியில் எல்லாமே நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது, பிறகு ஏன் ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கு ஓய்வு கொடுத்து 3 ஸ்பின்னர்களை விளையாட வைக்க வேண்டும். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், ரோஹித்தின் சிந்தனை எனக்குப் புரிந்தது எனக் கூறினார். 

உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் விளையாட தயாராக இருந்தேன் -அஷ்வின்

இறுதிப்போட்டியில் விளையாடுவது பெரிய விஷயமாக இருந்திருக்கும், அதற்கு நான் தயாராக இருந்தேன். ஆனால் அதே நேரத்தில் வெளியில் அமர்ந்து அணியை உற்சாகப்படுத்தவும், வீரர்களுக்கு தண்ணீர் வழங்கவும் தயாராக இருந்தேன் என்றார். (இங்கே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவலும் PTI ஊடகத்தில் இருந்து பெறப்பட்டது)

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.