புதுடெல்லி: ஏழைகள், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள்தான் நான் கருதும் நான்கு பெரிய சாதிகள்; அவர்களின் உயர்வே நாட்டை வளர்ச்சியடையச் செய்யும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் பயனாளிகளிடம் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியது: “ஏழைகள், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள்தான் நான் கருதும் நான்கு பெரிய சாதிகள். இவர்களின் உயர்வில்தான் இந்தியாவின் வளர்ச்சி உள்ளது. வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான சபத யாத்திரை ரதங்கள் நாட்டின் அனைத்து மூலைகளுக்கும் பயணிக்கும். இந்த யாத்திரை, மக்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மோடியின் உத்தரவாதங்களை சுமந்து செல்லும் வாகனங்கள் என்று சிலர் வர்ணித்துள்ளனர். ஏனெனில், கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் மோடி நிறைவேற்றுவார் என்பது மக்களுக்குத் தெரியும்.
அரசுப் பணிகளுக்கான உத்தரவாத கடிதத்தை இன்று 51 ஆயிரம் பேர் பெற்றுள்ளனர். இந்த பணி வாய்ப்பு என்பது உங்களின் உழைப்புக்கும் தகுதிக்கும் கிடைத்த அங்கீகாரம். இதற்காக உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது பாராட்டுக்கள். அரசு அலுவலராக உங்களுக்கு பல்வேறு பொறுப்புகள் உள்ளன. நீங்கள் எந்த துறையில் பணியாற்றுகிறீர்கள் என்பது முக்கியமல்ல. நீங்கள் எந்த துறையில் பணியாற்றினாலும், மக்களின் வாழ்க்கையை மேலும் எளிதாக்குகிறீர்களா என்பதே முக்கியம்.
2014-க்கு முன், சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் அடிப்படைத் தேவைகள் நிறைவேறாமல் இருந்து வந்தனர். 2014ல் அரசாங்கத்தை நடத்தும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. ஏழைகளுக்கு முன்னுரிமை என்ற மந்திரத்தோடு நாங்கள் எங்கள் பணிகளைத் தொடங்கினோம். இதன் காரணமாக, அரசின் எந்த திட்டத்தின் பயனையும் பெறாத ஏழைகளை நோக்கி அரசின் திட்டங்கள் சென்றன. பல பத்தாண்டுகளாக அரசின் திட்டங்கள் சென்றடையாத மக்களைச் சென்றடையும் நோக்கில் மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
மத்திய அரசின் சிந்தனையில் ஏற்பட்ட மாற்றம், எதிர்பாராத பலன்களை அளித்துள்ளது. அரசு எந்திரம் அப்படியேத்தான் உள்ளது. அதே பணியாளர்கள்தான் இருக்கிறார்கள். ஆனால், மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஏழைகள் முன்னேறிக்கொண்டிருக்கிறார்கள்” என்று பிரதமர் மோடி பேசினார்.