சென்னை: “கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேல், விடாமல் மழை கொட்டித் தீர்த்தாலும், பல இடங்களில் மழைநீர் தேங்காமல் இருந்தது. தொடர் மழை காரணமாக தற்போது சில இடங்களில் தேங்கிய மழைநீரும் விரைந்து வடிந்து கொண்டிருக்கிறது. விரைவாகச் செயல்பட்டு, தேங்கிய நீரை வெளியேற்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேல், விடாமல் மழை கொட்டித் தீர்த்தாலும், பல இடங்களில் மழைநீர் தேங்காமல் இருந்தது. தொடர் மழை காரணமாகத் தற்போது சில இடங்களில் தேங்கிய மழைநீரும் விரைந்து வடிந்து கொண்டிருக்கிறது. விரைவாகச் செயல்பட்டு, தேங்கிய நீரை வெளியேற்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். மழை தொடர்பான புகார்களுக்குச் சென்னை மக்கள் 1913, 04425619204, 04425619206, 04425619207 ஆகிய எண்களிலும், 9445477205 எண் மூலம் வாட்சாப் வழியாகவும் உதவிகளைப் பெறலாம்” என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (நவ.30) சென்னை மாநகரில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், வங்கக் கடலில் உருவாகவுள்ள புயல் காரணமாக மேற்கொள்ளப்பட வேண்டிய மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்தும் பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்ட்டத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, மழைநீர் வெள்ள பாதிப்பு தொடர்பாக கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்ட பொதுமக்களிடம் தொலைபேசி மூலம் உரையாடி அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்து, அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், ரிப்பன் மாளிகையில் தயார் நிலையில் உள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவினரை முதல்வர் சந்தித்து, மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்து, மீட்பு உபகரணங்களையும் பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து, முதல்வர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்படும் பொதுமக்களுக்கு தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர் மற்றும் மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுத்திட வேண்டும் என்றும்,மின்தடை ஏற்படக்கூடிய இடங்களில் உடனடியாக மக்களுக்கு எந்தவித இடையூறிமின்றி மின்விநியோகம் செய்திட நடவடிக்கை மேற்கொள்ளவும், அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தினார்.