மதுரை: மதுரையில் டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி பணம், மதுபாட்டில்களை கொள்ளையடிக்கும் சமூக விரோதிகளை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என சிஐடியு டாஸ்மார்க் ஊழியர் சங்கத்தினர் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியர், எஸ்பி, டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் ஆகியோரிடம் மனு அளித்தனர்.
இதுகுறித்து அச்சங்கத்தின் தலைவர் எம்.சுந்தரமகாலிங்கம் தலைமையில் பொதுச்செயலாளர் டி.சிவக்குமார், பொருளாளர் ஜி.பொன்ராஜ், சிஐடியு மாவட்டச் செயலாளர் ரா.லெனின் ஆகியோர் கூறியதாவது: “மதுரை (தெற்கு) மாவட்டம் டாஸ்மாக் மதுபானக்கடை எண்-5505-ல் நவ.25-ம் தேதி இரவு கடையை அடைத்துவிட்டுச்சென்ற விற்பனையாளர் கணேஷ்குமாரை, ஹெல்மெட் அணிந்த 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து பட்டா கத்தியால் தலையில் தாக்கினர். பின்னர் கடையை திறந்து ரொக்கப்பணம், மதுபாட்டில்களை கொள்ளையடித்துச் சென்றனர்.
இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதால், ஊழியர்கள் அச்சத்துடன் பணியாற்றுகின்றனர். டாஸ்மாக் ஊழியர்களை தாக்கும் சமூக விரோதிகளை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். மேலும், பேரையூர், உசிலம்பட்டி வட்டாரங்களில் மதுபானங்களை சட்ட விரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்வோரை கைது செய்யும் போலீஸார் அருகிலுள்ள டாஸ்மாக் கடை ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்கின்றனர். உரிய விசாரணையின்றி வழக்குப்பதிவு செய்வதை தவிர்க்குமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட வேண்டும்” என்று அவர்கள் தெரிவித்தனர்.