தனக்கு என்ன வரும் என்பது விஜய் ஆண்டனிக்கு தெரியும்

சுசீந்திரன் தயாரிப்பில் சமீபத்தில் 'மார்கழி திங்கள்' படம் வெளியானது. தற்போது அவர் இயக்கத்தில் 'வள்ளி மயில்' உருவாகி வருகிறது. இந்த படத்தில் விஜய் ஆண்டனி, பரியா அப்துல்லா, பாரதிராஜா, சத்யராஜ் நடிக்கிறார்கள். விஜய் சக்ரவர்த்தி ஒளிப்பதிவு செய்கிறார். இமான் இசை அமைக்கிறார். 80களின் நாடகக்கலை பின்னணியில் திரில்லர் படமாக உருவாகியுள்ளது. இதன் பாடல் வெளியீட்டு விழா நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் சத்யராஜ் பேசியதாவது: நாம் நடிக்கும் நிறைய படங்களில் நம் கொள்கைகள் பற்றி எல்லாம் பேச முடியாது. வேலை பார்க்க வந்துள்ளோம். அதை மட்டும் செய்ய வேண்டும் எனச் செய்துவிட்டுப் போவோம். ஆனால், இந்தப் படம் என் கொள்கைகள் பேச முடிந்த படமாக அமைந்தது மகிழ்ச்சி. சுசீந்திரன் ஒவ்வொரு படமும் வித்தியாசமாக எடுக்கிறார். இன்னொரு கதை வைத்துள்ளார், அது வந்தால் இன்னும் மிகப்பெரிய படமாக வரும்.

விஜய் ஆண்டனி மிகச்சிறந்த மனிதர், தனக்கு என்ன வரும் என்பதில் தெளிவானவர். வள்ளி மயில் என பெண் கதாபாத்திர பெயரில் தலைப்பு வைத்ததற்கு மகிழ்ச்சி. அதற்கு ஒப்புக்கொண்ட விஜய் ஆண்டனிக்கு நன்றி. இமான் பற்றி மிகச் சிறந்த விஷயங்கள் கேட்டுள்ளேன். எனக்குத் தெரிந்த ஒரு படத்திற்கு சம்பளமே வாங்காமல் இசையமைத்தார். பரியா மிகச்சிறந்த நாயகி. எனக்குத் தெரிந்து தமிழில் உயரமான கதாநாயகியாக இருப்பது அவர்தான். இப்படத்திற்காக உங்களைப்போல் நானும் காத்திருக்கிறேன். என்றார்.

இயக்குநர் சுசீந்திரன் பேசியதாவது: எனது தயாரிப்பில் இது 4வது படம். வள்ளி மயில் ஒரு கிரைம் திரில்லராக ஆரம்பித்த படம். ஒரு வில்லனைப் பின்னணியாகக் கொண்டு கதை நடக்கும். பிரகாஷ்ராஜ் மிரட்டியிருக்கிறார். இமான் உடன் 7 வது படம், இன்னும் நிறையப் படங்கள் வேலை செய்வோம். விஜய் ஆண்டனி உடன், முதல் முறையாக வேலை செய்கிறேன். உங்கள் படம் சார் நீங்கள் சொல்வதை செய்கிறேன் என்று வந்தார், வெண்ணிலா கபடிக் குழு படத்திற்குப் பிறகு நிறையக் கதாபாத்திரங்கள். சத்யராஜ் சார் மிக முக்கியமான ரோல், அவரைச் சுற்றி 4 பேர் அதே போல், விஜய் ஆண்டனியை சுற்றி 4 பேர் எனப் பெரிய கூட்டம் படத்தில் இருக்கும். பரியா அப்துல்லா மிக முக்கியமான ரோல், அற்புதமாக நடித்துள்ளார். மிகச் சிக்கலான கதை, அதை மிக எளிமையாகச் சொல்ல முயன்றுள்ளோம். என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.