சேலத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் அரசு உறுதிமொழி ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் உறுதிமொழி ஆய்வுக் குழு தலைவர் வேல்முருகன் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு, சேலம் ஏற்காடு அரசு மருத்துவமனை, உயிரியல் பூங்கா உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தனர்.
அதன்பின் மதியம் 2 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துதுறை அதிகாரிகள் உடனான ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது ஒவ்வொரு துறை அதிகாரியுடன் கலந்து ஆலோசித்து கொண்டிருந்தபோது, சரியாக 5.30 மணியளவில், அதாவது கூட்டம் முடிய போகும் நேரத்தில் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் கூட்டத்திற்கு கலந்து கொள்ள வந்துள்ளார்.
அப்போது ஆய்வுக் குழுவின் தலைவர் வேல்முருகன் அவரை நிறுத்தி, `நீங்கள்தான் பெரியார் பல்கலைக்கழகம் சார்பாக கூட்டத்திற்கு வருகை புரிந்துள்ளீர்களா? முன்கூட்டியே உங்களுக்கு யாரும் அழைப்பு விடுக்கவில்லையா.. ஆய்வுக் குழு கூட்டம் நடக்கும்போது அதில் கலந்து கொள்ள முடியவில்லை என்றால் அதற்கான விளக்கத்தை முன்கூட்டியே தரவேண்டும். அது மட்டுமல்லாது தங்களுக்கு பதிலாக வேறொரு அதிகாரியை கூட்டத்திற்க அனுப்ப வேண்டும் என்ற விதிமுறை இருப்பது உங்களுக்கு தெரியுமா..தெரியாதா?” என்று கேள்வியை அடுக்கிக் கொண்டு இருந்தார்.
அப்போது பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல், “எனக்கு தேர்வுக்கான வினாத்தாளுக்கு பணம் அனுப்ப வேண்டிய வேலை இருந்தது. அதனால் தாமதம் ஆகிவிட்டது” என்று பதில் அளித்தார். இதனை ஏற்றுக் கொள்ளாத தலைவர், “தமிழ்நாடு அரசு தான் உங்களுக்கு சம்பளம் போடுகிறது தெரியுமா… தெரியாதா உங்கள் உயர்கல்வித்துறை அமைச்சர் உத்தரவுக்கிணங்க தான் இங்கு ஆய்வு குழு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அப்படி இருக்கும் போது நீங்கள் பொறுப்பு இல்லாமல் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதை எப்படி எடுத்துக் கொள்வது?” என்று கேட்டார்.
உடனே ஆய்வுக்குழு உறுப்பினரான சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் மைக்கை வாங்கி, “பெரியார் பல்கலைக்கழக செனட் உறுப்பினராக மூன்றாண்டு காலமாக இருந்து வருகிறேன். ஆனால் ஒரு தடவை கூட என்னை கூட்டத்திற்கு அழைத்தது கிடையாது. ஏன் இந்த ஆட்சி வந்தவுடன் நீங்கள் தலைகீழாக மாறிவிட்டீர்கள்?” என்று பதிவாளர் தங்கவேலுவிடம் பொங்கி எழுந்தார். உடனே மேட்டூர் எம்.எல்.ஏ சதாசிவமும், “நான் போன முறை பட்டமளிப்பு விழாவிற்கு வருகை புரிந்து போது, என்னை அவமதிக்கும் விதமாக நடந்து கொண்டதால் நான் பாதியிலேயே வெளியேறினேன். பெரியார் பெயரில் இயங்கக்கூடிய பல்கலைக்கழகத்தில் ஏன் இந்த பாகுபாடு?” என்று 20 நிமிடம் சம்பந்தப்பட்ட பதிவாளர் தங்கவேலுவை நிற்க வைத்து கேள்விகளை அடுக்கி விட்டனர். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.