ஹைதராபாத்: தெலங்கானாவில் காலை 10 மணி நிலவரப்படி 22% வாக்குகள் பதிவாகி உள்ளன.
தெலங்கானாவில் மொத்தமுள்ள 119 தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தேர்தல் தொடங்கியது. 106 தொகுதிகளுக்கு மாலை 5 மணி வரையும், இடதுசாரி தீவிரவாதம் அதிகமுள்ள 13 தொகுதிகளில் மாலை 4 மணி வரையும் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் பணியில் 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தேர்தலில், ஆளும் பாரத் ராஷ்ட்ர சமிதி(பிஆர்எஸ்), காங்கிரஸ், பாஜக இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. இதில், பிஆர்எஸ் அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. காங்கிரஸ் 118 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஒரு தொகுதியை கூட்டணி கட்சியான சிபிஐக்கு வழங்கி உள்ளது. பாஜக, நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா உடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இதில், பாஜக 111 தொகுதிகளிலும், ஜன சேனா 8 தொகுதிளிலும் போட்டியிடுகின்றன.
வாக்குப்பதிவு தொடங்கியது முதல் மிக நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர். ஜங்கோன் தொகுதியில் பூத் எண் 244ல், பிஆர்எஸ், காங்கிரஸ், பாஜக இடையே கைகளப்பு ஏற்பட்டது. எனினும், போலீசார் தலையிட்டு தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதேபோல், நிஜாமாபாத் மாவட்டத்தின் போதன் நகரில் பிஆர்எஸ் – காங்கிரஸ் தொண்டர்களிடையே கைகளப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். இப்ராஹிம்பட்டிணம் தொகுதிக்கு உட்பட்ட கானாபூர் கிராமத்தில் பிஆர்எஸ் – காங்கிரஸ் இடையே கைகளப்பு ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மற்றபடி, பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 10 மணி நிலவரப்படி 22% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.