புதுடெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எக்ஸ் (முன்பு ட்விட்டர்) சமூக வலைதளபக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:
வடகிழக்கில் அமைதியை நிலைநாட்ட மோடி தலைமையிலான அரசு இடைவிடாத முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. அதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. அதன்படி மணிப்பூரின் ஐக்கிய தேசிய விடுதலை முன்னணியுடன் (யுஎன்எல்எஃப்), அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் மணிப்பூரின் பழமையான யுஎன்எல்எஃப் ஆயுத குழு வன்முறை பாதையை கைவிட்டு தேசிய நீரோட்டத்தில் இணைய ஒப்புக்கொண்டுள்ளது ஒரு வரலாற்று மைல்கல். அமைதி மற்றும் முன்னேற்றத்தை நோக்கிய அவர்களின் பயணத்துக்கு நல்வாழ்த்துகளை தெரிவிக்க விரும்புகிறேன்.
இவ்வாறு அமித் ஷா கூறியுள்ளார்.
யுஎன்எல்எஃப் உட்பட பல்வேறு தீவிரவாத அமைப்புகளை தடை செய்வதாக மத்திய அமைச்சகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது. இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாட்டுக்கு பாதகமாக இந்த அமைப்புகள் செயல்பட்டதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் தற்போது இந்த அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.