சென்னை: சென்னையில் கனமழை தொடரும் நிலையில், மீட்பு மற்றும் நிவாரணபணிகளை தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் விரைவுபடுத்த வேண்டும். மழை – வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (நவ.30) வெளியிட்ட அறிக்கையில், ”சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்றிரவு பெய்த மழையால், மாநகரத்தின் பெரும்பான்மையான பகுதிகள் வெள்ளக்காடாக மாறியிருக்கின்றன. சாலைகளில் வெள்ளம், வீடுகளுக்குள் தண்ணீர், போக்குவரத்து பாதிப்பு என பலவழிகளில் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், மழை பாதிப்புகளை சரி செய்ய போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதது கண்டிக்கத்தக்கது.
சென்னை பெருநகரப் பகுதிகளில் நேற்று மாலை 6 மணிக்குத் தொடங்கி 9 மணி வரை இடைவிடாமல் பெய்த கனமழை மிகக்கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பான்மையான இடங்களில் 10 முதல் 12 செ.மீ வரை மழை கொட்டியுள்ள நிலையில், மிக அதிக அளவாக மீனம்பாக்கத்தில் 26 செ.மீ அளவுக்கும், ஆவடியில் 19 செ.மீ அளவுக்கும் மழை கொட்டியுள்ளது. மிகக்குறுகிய காலத்தில் இந்த அளவுக்கு மழை பெய்திருப்பது எதிர்பார்க்கப்படாத ஒன்று தான் என்றாலும், கூட அதனால் பல இடங்களில் ஏற்பட்ட மழை வெள்ளம் பல மணி நேரம் ஆகியும் வடியாதது பாதிப்பை அதிகரித்துள்ளது.
சென்னை புறநகர் பகுதியான ஆவடியில் தொடங்கி சென்னை கொளத்தூர், அம்பத்தூர், அண்ணா நகர், கோடம்பாக்கம், அசோக்நகர், மேற்கு மாம்பலம், தியாகராயநகர், மயிலாப்பூர் என மாநகரத்தின் பெரும்பான்மையான இடங்களில் பல அடி ஆழத்திற்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. அதனால், இரு சக்கர ஊர்திகள், மிதிவண்டிகள் ஆகியவற்றில் மக்கள் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னையின் பெரும்பான்மையான இடங்களில் தாழ்வான குடியிருப்புப் பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்திருக்கிறது. அதனால், அப்பகுதிகளில் உள்ள வாழும் மக்கள், வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களால் உணவுப் பொருட்கள், காய்கறிகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களைக் கூட வாங்க முடியவில்லை. சாலைகளில் தேங்கி நிற்கும் மழை நீரால் போக்குவரத்து தடை பட்டிருப்பதால் பல குடியிருப்பு பகுதிகள் தீவாக மாறியிருக்கின்றன.
மழை நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்; அமைச்சர்கள் களத்திற்கு செல்ல வேண்டும் என்று முதலமைச்சர் ஆணையிட்டதாக செய்திகள் வெளியான போதிலும் களத்தில் அதற்கான அறிகுறிகள் தென்படவில்ல்லை. சென்னை மாநகரத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் அவர்களின் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டாலும் மற்ற பகுதிகளை மாநகராட்சியோ, அமைச்சர்களோ கண்டுகொள்ளவில்லை. மழை பாதிப்புகள் குறித்து மாநகராட்சி அறிவித்துள்ள தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தாலும் உடனடியாக நடவடிக்கை இல்லை.
சென்னையில் பெய்துள்ள மழை ஒப்பீட்டளவில் அதிகம் இல்லை. அதிலும் குறிப்பாக கடந்த இரு ஆண்டுகளாக சென்னை மாநகரத்தில் 800 கி.மீக்கும் கூடுதலான தொலைவுக்கு மழைநீர் வடிகால்கள் புதிதாக அமைக்கப்பட்ட நிலையில், சென்னையில் மழைநீர் தேங்காது என்று பலரும் நம்பிக் கொண்டிருந்தனர். ஆனால், அந்த நம்பிக்கை நேற்றைய மழையில் பொய்த்துப் போயிருக்கிறது. மழைநீர் வடிகால்கள் அமைக்கப்படுவதற்கு முன்பாக ஒவ்வொரு பகுதியிலும் எந்த அளவுக்கு தண்ணீர் தேங்கி நின்றதோ, இப்போதும் அதே அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. நேற்று மாலை தொடங்கி இரவு வரை மிக அதிக மழை பெய்தாலும், இரவில் மழை பெய்யவில்லை. ஆனாலும், மழை நீர் வடியவில்லை. இன்று காலை முதல் மீண்டும் கடுமையான மழை பெய்யத் தொடங்கியுள்ள நிலையில், அடுத்து வரும் நாட்களில் சென்னை மாநகரின் நிலை என்னவாகுமோ? என்ற அச்சமும், கவலையும் ஏற்படுகிறது.
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் முதல் கட்டமாக முடிக்கப்பட்ட பிறகு இப்போது தான் ஓரளவு கனமழை பெய்துள்ளது. இந்த மழையால் பெருக்கெடுத்த தண்ணீரை வெளியேற்ற மழைநீர் வடிகால்கள் திணறுகின்றன என்பது தான் உண்மை. எனவே, மழைநீர் வடிகால்களின் அமைப்பு, அமைக்கப்படும் முறை ஆகியவற்றை ஆய்வு செய்து, தேவையான மாற்றங்களை செய்ய வேண்டும் என்று ஏற்கனவே வலியுறுத்தியிருந்தேன். அதையே மீண்டும் வலியுறுத்துகிறேன். மழைநீர் வடிகால் கட்டமைப்புகளை ஆய்வு செய்து, தேவையான மாற்றங்களை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னையில் கனமழை தொடரும் நிலையில், மீட்பு மற்றும் நிவாரணபணிகளை தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் விரைவுபடுத்த வேண்டும். மழை & வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.