பல்லாரி:கர்நாடக மாநிலம் சந்துாரில் உள்ள 1,200 ஆண்டுகள் பழமையான குமாரசாமி கோவிலை ‘யுனெஸ்கோ’ பட்டியலில் சேர்க்க, கிராம மக்கள் கையெழுத்து பிரசாரத்தை துவக்கியுள்ளனர்.
கர்நாடகாவின் பல்லாரி மாவட்டம் சந்துாரில் அமைந்துள்ளது குமாரசாமி கோவில். இக்கோவில், 1,200 ஆண்டுகள், அதாவது, விஜயநர பேரரசுக்கு காலத்துக்கு முன்பே கட்டப்பட்டது.
கடந்த ஆண்டு இக்கோவில் அருகில் சுரங்க தொழில் துவங்கியது. இதனால் கோவிலின் ஒரு துாண் இடிந்து விழுந்தது. இதனால் சுரங்க நிறுவனத்துக்கு எதிராக, கிராம மக்கள், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்றமும், இதுகுறித்து விசாரிக்க சுற்றுச்சூழல் வாரியம் குழுவை அமைக்க உத்தரவிட்டது.
இந்நிலையில், ஜனசங்ராம் பரிஷத்தின் சமாஜ் சார்பில், இக்கோவிலை, இந்திய தொல்லியல் துறையின் கீழ், ‘யுனெஸ்கோ’ பட்டியலில் சேர்க்க பிரசாரம் மேற்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து கிராமத்தை சேர்ந்த ஸ்ரீஷைல் கூறியதாவது:
கடந்த இரண்டு நாட்களாக சந்துார் ஸ்கந்த திருவிழா நடந்து வருகிறது. மக்கள் ஆதரவுடன் இந்த கோவிலை காப்பாற்ற முயற்சித்து வருகிறோம். இதற்காக கையெழுத்து இயக்கம் நடத்துகிறோம்.
கோவில் அருகில் சுரங்கம் தோண்டுவதை நிறுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், சில சுரங்க நிறுவனங்கள் வழிமுறைகளை பின்பற்றவில்லை.
இக்கோவில் யுனெஸ்கோ பட்டியலில் சேர்க்கப்பட்டால், இதன் அருகில் சுரங்கம் தோண்ட அனுமதிக்கப்படாது.
இக்கடிதத்தை யுனெஸ்கோ தலைமையகத்துக்கு கடிதம் அனுப்ப திட்டமிட்டு உள்ளோம். சுரங்க தொழிலை நிறுத்துவதற்கு வசதியாக, கோவிலின் 2 கி.மீ.,க்குள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக உடனடியாக அரசு அறிவிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
இந்த கையெழுத்து இயக்கத்தில், 20,000 பேர் கையெழுத்திடுவர் என நம்புகிறோம்.
கையொப்பமிட்ட உடன், யுனெஸ்கோ தலைமையகத்துக்கும், கர்நாடக உயர்நீதிமன்றத்துக்கும் அனுப்பப்படும். வருங்கால சந்ததியினருக்காக, வரலாற்று சிறப்புமிக்க கோவிலை காப்பதே எங்கள் ஒரே நோக்கம்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்