பெங்களூரு:முந்தைய பா.ஜ., அரசு மீதான 40 சதவீத குற்றச்சாட்டு சுமத்திய, கர்நாடக மாநில ஒப்பந்ததாரர்கள் சங்க தலைவர் கெம்பண்ணா, 600 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை, நீதிபதி நாக்மோகன்தாஸ் தலைமையிலான ஆணையத்திடம் ஒப்படைத்தார்.
கடந்த பா.ஜ., ஆட்சியில் 40 சதவீதம் கமிஷன் கேட்பதாக, மாநில ஒப்பந்ததாரர்கள் சங்கத் தினர் குற்றம் சாட்டிஇருந்தனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்த, தற்போதைய காங்கிரஸ் அரசு, நீதிபதி நாக்மோகன் தாஸ் தலைமையிலான ஆணையத்தை அமைத்தது. இந்த ஆணையத்திடம், நேற்று கெம்பண்ணா, 40 சதவீதம் கமிஷன் கேட்டது தொடர்பாக, 600 பக்கம் கொண்ட ஆவணங்களை சமர்ப்பித்தார். பின், கெம்பண்ணா அளித்த பேட்டி:
பல துறைகளின் பணிகளில் நடந்த ஊழல் குறித்து ஆவணங்களுடன் புகார் அளித்துள்ளோம். மேலும் ஆவணங்களை சேகரிக்க, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.
தகவல் கிடைத்ததும், ஆணையத்திடம் சமர்ப்பிப்போம். ஆணையத்தின் விசாரணையின் போது, ஆதாரங்கள் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement