புதுடில்லி :நம் ராணுவத்தின் பலத்தை மேலும் அதிகரிக்கும் விதமாக கூடுதலாக, 97 தேஜஸ் போர் விமானங்கள் மற்றும் 156 பிரசந்த் தாக்குதல் ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கு ராணுவ கொள்முதல் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது-.
மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் ராணுவ கொள்முதல் கவுன்சில் கூட்டம் புதுடில்லியில் நேற்று நடந்தது.
அப்போது நம் ராணுவத்தை மேலும் பலப்படுத்தும் வகையில் 1.1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் கூடுதலாக 97 தேஜஸ் போர் விமானங்கள் மற்றும் 156 பிரசந்த் தாக்குதல் ஹெலிகாப்டர்கள் வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இவை இரண்டுமே உள்நாட்டில் தயாரிக்கப்படுகின்றன.
தேஜஸ் மார்க் 1ஏ போர் விமானங்கள் நம் விமானப்படைக்காகவும், பிரசந்த் தாக்குதல் ஹெலிகாப்டர்கள் விமானப் படை மற்றும் ராணுவத்திற்காகவும் வாங்கப்பட உள்ளன.
இவை மட்டுமின்றி கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் உட்பட பல்வேறு தளவாடங்களை வாங்குவதற்கான ஒப்பந்தங்களுக்கும் ராணுவ கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.
இதற்கான மொத்த மதிப்பு 2.23 லட்சம் கோடி ரூபாய். இந்த மொத்த தொகையில் 98 சதவீதம் உள்நாட்டு உற்பத்தியில் இருந்து பெறப்படும். இந்த ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டால், இந்திய வரலாற்றில் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பெற்ற மிகப்பெரிய ஆர்டராக இது இருக்கும். உற்பத்திக்கான இறுதி விலை தீர்மானிக்கப்பட்டவுடன் ராணுவ அமைச்சரவை குழு, இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்யும். இந்த ஒப்பந்தம் முடிந்து விமானங்கள் தயாரிக்க குறைந்தது 10 ஆண்டுகள் ஆகலாம் என கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement