வாஷிங்டன், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தபோது, இந்தியாவுடனான உறவை இகழ்ந்து பேசிய, அதே நேரத்தில், நரேந்திர மோடி பிரதமரானப் பின், இந்தியாவுடனான நல்லுறவு குறித்து வலியுறுத்திய, ஹென்ரி கிசிஞ்சர், 100, உயிரிழந்தார்.
குடியுரிமை
அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளை வடிவமைத்தவர் என்ற பெருமையை பெற்றவர், ஹென்ரி கிசிஞ்சர். கடந்த, 1970களில், இரண்டு அதிபர்கள் கீழ் பணியாற்றிய அவர், சர்வதேச அளவில் பல பெரும் மாற்றங்களுக்கு வித்திட்டவர்.
இந்நிலையில், அவர் நேற்று உயிரிழந்ததாக, அவருடைய அறக்கட்டளை தெரிவித்துள்ளது. ஆனால், மரணத்துக்கான காரணத்தை தெரியப்படுத்தவில்லை.
வியட்நாம் உடனான போர் நிறுத்தம், முந்தைய சோவியத் யூனியனுடனான நட்பு, சீனாவுடன் உறவுக்கு பாலமிட்டது என, இவருடைய வெளியுறவுக் கொள்கைகள் பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றவை.
ஐரோப்பிய நாடான ஜெர்மனியில், 1923ல் பிறந்த இவர், நாஜிப் படைகளிடம் இருந்து தப்பி, குடும்பத்துடன் அமெரிக்காவில் தஞ்சமடைந்து, அங்கு குடியுரிமை பெற்றார்.
அமெரிக்காவில் படித்து, பேராசிரியராக பணியாற்றினார். அப்போது அரசுக்கு பல வெளியுறவுக் கொள்கைகளில் உதவினார்.
இதையடுத்து, தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்ட அவர், வெளியுறவுத் துறை அமைச்சராகவும் இருந்தார். அமெரிக்க அதிபர்களாக இருந்த ரிச்சர்ட் நிக்சன், ஜெரால்டு போர்ட் ஆட்சியின் போது, நாட்டின் வெளியுறவுக் கொள்கைகளை வகுப்பதில் முக்கிய பங்காற்றினார்.
வியட்நாம் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு முக்கிய காரணமாக இருந்த அவருக்கு, 1973ல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இந்தியாவுடனான உறவில் முதலில் எதிர்ப்பு கொள்கையை வைத்திருந்தார். கடந்த, 1971ல் இந்தியா – பாகிஸ்தான் போரின்போது, பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தார்.
இந்தியா குறித்தும், இந்தியர்கள் குறித்தும், இழிவான கருத்துக்களை வெளியிட்டார். அப்போது பிரதமராக இருந்த இந்திரா குறித்தும் கேலியாக பேசினார்.
இதைத் தொடர்ந்து, சீனாவுடனான உறவுக்கு அவர் அடித்தளம் இட்டார்.
ஆனால், 1974ல், அணு ஆயுத சோதனையை மேற்கொண்ட பின், நம் நாடு மீதான தன் கண்ணோட்டத்தை அவர் மாற்றிக் கொண்டார்.
நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பின், இந்தியாவுடனான உறவை வலுப்படுத்த வேண்டும் என, அமெரிக்க அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
பாராட்டு
கடந்த, மே மாதம், 100வது பிறந்த நாளை அவர் கொண்டாடினார். ஜூன் மாதம், மோடி அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டபோது, அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, மோடியின் பேச்சைக் கேட்டு பாராட்டினார். அவருடன் சிறிது நேரம் பேசினார்.
தன் முதல் மனைவி ஆன் பிளெட்சபை, 1964ல் விவாகரத்து செய்தார். கடந்த, 1974ல், இரண்டாவது திருமணம் செய்தார். முதல் மனைவி வாயிலாக, அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்