தொடர் மழையால் அதிகரிக்கும் நீர்வரத்து; செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 6,000 கன அடி நீர் திறப்பு!
வடகிழக்குப் பருவமழை காரணமாக கடந்த சில தினங்களாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்றைய தினம் சென்னையில் கனமழை கொட்டித்தீர்த்தது. நேற்று மாலை முதல் இரவு வரை மட்டும் சென்னையில் ஐந்து இடங்களில் 10 செ.மீ-க்கும் அதிகமான மழை பதிவானது. அதன் காரணமாக பல இடங்களில், சாலைகளில் தண்ணீர் தேங்கியது.
சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, குடிநீர் வழங்கும் புழல், செம்பரம்பாக்கம், பூண்டி ஆகிய பிரதான ஏரிகளில் நீர்வரத்து அதிகரித்திருக்கிறது. 3,645 மி.கன அடி கொள்ளளவுகொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில், தற்போது 90 சதவிகிதத்துக்கும் அதிகமாக நீர் இருப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி, கொள்ளளவை எட்டுவதால், ஏரியிலிருந்து நேற்று முன்தினமும், நேற்றும் நீர் திறக்கப்பட்டது. இருப்பினும் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருப்பதால், இன்று காலை 9 மணி முதல் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 6,000 கன அடி நீர் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போதைய நிலவரப்படி ஏரிக்கு நீர்வரத்து என்பது 3,000 கன அடியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் திறக்கப்படுவதால், அதன் கரையோர பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.