மைசூரு:நஞ்சன்கூடின் ஹெடியாலா வன மண்டலத்தின் பள்ளூருஹுன்டி கிராமத்தில் பெண்ணை பலி வாங்கிய ஆண் புலி, கூண்டில் சிக்கியதால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.
மைசூரு நஞ்சன்கூடின் பள்ளூருஹூன்டி கிராமத்தில் நான்கு நாட்களுக்கு முன்பு ரத்னம்மா, 50, என்பவர், மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது, புலி தாக்கியதில் உயிரிழந்தார். இதனால் கிராமத்தினர் பீதிஅடைந்தனர்.
புலியை பிடிக்கும்படி வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன்படி வனத்துறையினர், புலியை பிடிக்கும் நடவடிக்கையில் இறங்கினர். வளர்ப்பு யானைகள் பார்த்தசாரதி, ரோஹித், ஹிரண்யா உதவியுடன் புலியை தேடினர். நாகனாபுரா, டோரனகட்டே, வெங்கடகிரி, வடயனபுரா என சுற்றுப்பகுதிகளில் தேடினர். எங்கும் தென்படவில்லை.
மூன்று நாட்களுக்கு முன்பு, புலி பசுவை கொன்ற கல்லஹாரகன்டி என்ற இடத்தில் வனத்துறையினர் கேமரா பொருத்தினர். பசுவை தின்ன மீண்டும் வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பில் கூண்டு வைத்திருந்தனர்.
அதற்காக வனத்துறை ஊழியரும், கால்நடை டாக்டரும் காத்திருந்தனர். அவர்கள் நினைத்தபடியே நேற்று முன் தினம் அதிகாலையில், தீவனம் தேடி வந்தபோது, மயக்க ஊசி போட்டனர்.
இதை வலை போட்டுப் பிடித்தனர். பிடிபட்ட புலிக்கு 10 வயது. மைசூரின் வன விலங்கு மறுவாழ்வு மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. தங்களை அச்சுறுத்திய புலி சிக்கியதால், கிராமத்தினர் நிம்மதி அடைந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement