கோல்கட்டா,மேற்கு வங்கத்தில், பள்ளி ஆசிரியர்கள் பணி நியமன ஊழல் வழக்கில், திரிணமுல் காங்., – எம்.எல்.ஏ., மற்றும் கவுன்சிலர்களுக்கு சொந்தமான இடங்களில், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.
இங்கு, பள்ளிகளில் காலியாக இருந்த ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, நடத்தப்பட்ட தேர்வில் முறைகேடு நடந்ததாக உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சி.பி.ஐ., வசம் ஒப்படைக்கப்பட்டு, அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவ்வழக்கில், திரிணமுல் காங்.,கை சேர்ந்த முன்னாள் பள்ளி கல்வித் துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார்.
மேலும் பல திரிணமுல் காங்., நிர்வாகிகள் மீது சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது.
இந்நிலையில், நீதிமன்ற காவலில் இருக்கும் முன்னாள் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் நம்பிக்கைக்குரிய நபரான, திரிணமுல் காங்.,கை சேர்ந்த கோல்கட்டா மாநகராட்சி கவுன்சிலர் பபாதித்யா தாஸ்குப்தா மற்றும் பிதாநகர் நகராட்சி கவுன்சிலர் தேப்ராஜ் சக்ரவர்த்தி. வீடுகளில் சி.பி.ஐ., நேற்று சோதனை நடத்தியது.
மேலும், திரிணமுல் காங்., – எம்.எல்.ஏ., ஜபிகுல் இஸ்லாம் ஆகியோருக்கு சொந்தமான இடங்களிலும், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
கோல்கட்டா, முர்சிதாபாத், கூச் பெகார் உள்ளிட்ட மாவட்டங்களில் மத்திய ஆயுதப் படை போலீசாரின் பாதுகாப்புடன் இந்த சோதனை நடந்தது. மேலும் சம்பந்தப்பட்டவர்களிடம் சி.பி.ஐ., போலீசார் விசாரணை நடத்தினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement