தமிழ் சினிமாவில் அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி தெலுங்கு, இந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி ஹீரோவாக மட்டுமின்றி விக்ரம் வேதா, மாஸ்டர், விக்ரம், ஜவான் போன்று வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தி வருகிறார். தொடர்ச்சியாக வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வரும் ‘விஜய் சேதுபதி இனிமேல் வில்லனாக சில வருடங்களுக்கு நடிக்க மாட்டேன்’ என்று தெரிவித்திருக்கிறார்.
சமீபத்தில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்ட விஜய் சேதுபதி இதுகுறித்துப் பேசுகையில், “ வில்லன் கதாபாத்திரங்களில் நடிப்பதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. நிறைய அழுத்தங்கள் ஏற்படுகின்றன.
வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. ஹீரோவின் இமேஜை குறைக்காமல் நடிக்கச் சொல்வார்கள். வில்லனாக நான் நடித்த சில காட்சிகள் எடிட்டிங்கில் நீக்கப்பட்டும் இருக்கிறது.
அதனால் சில வருடங்களுக்கு வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறேன். வில்லனாக நடிக்க விருப்பம் இல்லை என்று சொன்னால், ஸ்கிரிப்டையாவது கேளுங்கள் எனச் சொல்கிறார்கள். அதிலும் நிறைய பிரச்னைகள் உள்ளன ” என்று தெரிவித்திருக்கிறார்.