அடுத்தடுத்த படங்களுக்கும் தொடர்ந்து இடையூறு செய்தார் ஞானவேல் ராஜா : அமீர் வெளியிட்ட புதிய தகவல்

பருத்திவீரன் படம் தொடர்பாக இயக்குனர் அமீருக்கும், படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும் இடையே நடைபெற்று வந்த வழக்கு மற்றும் கருத்து வேறுபாடுகள் கடந்த சில நாட்களாகவே ஒவ்வொன்றாக தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

ஒரு பக்கம் அமீருக்கு ஆதரவாக பிரபல இயக்குனர்கள், நடிகர்கள் என பலரும் தங்களது குரலை ஒலித்து வருகின்றனர். அமீரை தேவையில்லாமல் விமர்சித்து அதன்பிறகு பல பக்கங்களில் இருந்து கண்டனம் வந்ததும் வருத்தம் கேட்பதாக கூறி கைஎழுத்திடப்படாத ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டு அமைதியாகிவிட்டார் ஞானவேல் ராஜா.

அதே சமயம் இயக்குனர் அமீர் தற்போது ஒரு சேனல் ஒன்றுக்கு தொடர்ந்து அளித்து வரும் பேட்டியில் பேசும்போது, “பருத்திவீரன் படத்தோடு பிரச்சினை நின்றுவிடவில்லை. அதன் பிறகு யோகி படத்தை தயாரித்து நடித்து அதன் ரிலீஸுக்காக லேப் வாசலில் நான் காத்து நின்றபோது அந்த படத்தை வெளியிடக் கூடாது என்று கூறி ஒரே ஒரு நபர் மட்டும் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அவர் வேறு யாரும் அல்ல.. ஞானவேல் ராஜா தான்..

இத்தனைக்கும் பருத்திவீரன் படத்தில் அவர்தான் எனக்கு பாக்கி தொகை தர வேண்டியதாக முடிவு செய்யப்பட்டு அது கிடைக்காததால் தான் அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் யோகி பட வெளியீட்டின்போது நான் தான் அவருக்கு பணம் தர வேண்டும் என்று கூறி யோகி படத்தை நிறுத்தி வைக்குமாறு நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அதற்கான முறையான ஆவணங்களை அவரால் சமர்ப்பிக்க முடியவில்லை.

இதனால் நீதிமன்றத்தில் அவர் குட்டுப்பட்டு அந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. இவர் இப்படி வழக்கு தொடர்ந்த விபரம் கேள்விப்பட்டு என்னுடைய படப்பெட்டிகளை விநியோகஸ்தர்களுக்கு தராமல் அமைதி காத்தேன். நீதிமன்ற உத்தரவு குறித்த தகவல் எனக்கு கிடைத்த பின்னரே யோகி படப்பெட்டிகளை விநியோகஸ்தர்களிடம் ஒப்படைத்தேன்.

அதன் பிறகும் என்னுடைய உதவியாளர் கோபால் என்பவர் இயக்கி நான் நடித்த அச்சமில்லை அச்சமில்லை என்கிற படத்தையும் நாங்களே வெளியிடுவதாக கூறி ஞானவேல் ராஜா தொடர்புடைய ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கியது. ஆனால் இப்போது வரை அந்த படம் வெளியிடப்படாமல் பெட்டிக்குள் முடங்கியுள்ளது. என்ன காரணம் என்று தெரியவில்லை.. ஆனால் என் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்துகிறார்கள் என்பது மட்டும் புரிகிறது” என்று கூறியுள்ளார்.

ஞானவேல் ராஜாவோ அல்லது சிவகுமார் குடும்பமோ இந்த பிரச்சனைக்கு விரைவில் ஒரு தீர்வு காணாவிட்டால், இதுபோன்று இன்னும் பல கசப்பான விஷயங்கள் வெளிவருவதை தவிர்க்க முடியாது என்றே தெரிகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.